குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் புதிய தாதி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (17) நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
-வடமாகாணத்திற்கு என தெரிவு செய்யப்பட்ட 71 தாதி உத்தியோகத்தர்களுக்கும் இன்று திங்கட்கிழமை (17) காலை வடமாகாண சுகாதார அமைச்சில் வைத்து நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்திற்கு 24 தாதிய உத்தியோகத்தர்களும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 12 தாதி உத்தியோகத்தர்களும், மன்னார் மாவட்டத்திற்கு 13 தாதிய உத்தியோகத்தர்களும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 10 தாதி உத்தியோகத்தர்களும், வவுனியா மாவட்டத்திற்கு 12 தாதிய உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இதே வேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த மயக்க மருந்து வழங்கும் வைத்திய நிபுணர் வெற்றிடத்திற்கு வைத்திய நிபுணர் ஒருவர் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். -மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு காது,மூக்கு,தொண்டை போன்ற வற்றிற்கான விசேட வைத்திய நிபுணர் ஒருவரும் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
-இதே வேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் இடம் பெற்ற அசம்பாவிதம்; ஒன்றை தொடர்ந்து வைத்திய சாலையில் இருந்து வெளியேறிய மகப்பேற்று வைத்திய நிபுணரை உடனடியாக மீண்டும் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் கடமையில் ஈடுபடுத்த வடமாகாண சுகாதார திணைக்களம் மற்றும் வடமாகாண சுகதார அமைச்சர் ஆகியோர் மத்திய சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன் வைத்த நிலையில் குறித்த மகப்பேற்று வைத்திய நிபுணரை உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று கடமையினை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு மத்திய சுகாதார அமைச்சு காரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில தினங்களில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் குறித்த மகப்பேற்று வைத்திய நிபுணர் கடமையில் ஈடுபடுவார் எனவும் வடக்கு சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மேலும் தெரிவித்தார்.