குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வட-கிழக்கு காணி நிர்வாக திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்படும் 12 வருடங்கள் ஆகியும் தங்களுக்கு வழங்கபட வேண்டிய காணி வழங்கப்படவில்லை என மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்;பட்ட தேவன் பிட்டி விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் மன்னார் மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (17) மாலை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
தேவன் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 53 பேர் தங்களுக்கான விவசாய காணிகளை இன்னும் வழங்க வில்லை என கோரி பல்வேறு தடவைகள் மாந்தை பிரதேச செயலகத்தில் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் உரிய பதில் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேவன் பிட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்டாலும் ஆறு மாத காலம் மாத்திரமே மீன் பிடியை மேற்கொள்ள முடியும். அதன் காரனமாக ஏனைய ஆறு மாத காலமும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு; விவசாய செய்கைகளை மேற்கொள்வதற்காக விவசாய காணிகளை 1992 ஆண்டு மாந்தை மேற்கு பிரதேச செயளாலரின் ஆலோசனைக்கு அமைவாக பிரதேச மக்கள் கோரி இருந்தனர்.
இதன் பிரகாரம் 2006 ஆண்டு 53 நபர்களுக்கு பாலி ஆறு மற்றும் வெள்ளாங்குளம் அருகே அமைந்துள்ள காணிகளை வழங்க கோரி வட- கிழக்கு காணி நிர்வாக திணைக்களத்தினால் பெயர் விபரங்கள் அடங்கிய அனுமதி வழங்கப்பட்டது.இருந்த போதிலும் 12 வருடங்கள் கடந்தும் இது வரை மாந்தை பிரதேச செயலகத்தினால் தங்களுக்கு எந்த வித காணிகளும் வழங்கப்படவில்லை. அத்துடன் இது வரை எழுத்து பூர்வமான பதில்களும் எதுவும் வழங்கப்படவில்லை .
; தற்போது தாங்கள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுவதாகவும் எனவே தங்களுக்கு வழங்க தீர்மானித்திருந்த காணிகளை விரைவாக பெற்றுதார உதவி கோரியும் மன்னார் மனித உரிமை ஆணைகுழுவின் உப காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.