சிரியாவில் 14 வீரர்களுடன் சென்ற ரஸ்ய போர் விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் ரேடார் தொடர்பை இழந்ததால், அது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது . சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரச படைகளுக்கு ஆதரவளித்து வரும் ரஸ்யா கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் விமான தாக்குதலும் நடத்தி வருகிறது.
இந்தநிலையில் சிரிய எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஸ்ய போர் விமானம் ஒன்று நேற்று இரவு சிரியா கடற்கரையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விமானத்துக்கும் அதில் சென்றவர்களுக்கும் என்ன நடந்தது என்பது குறித்து தெரியாத நிலையில் விமானத்தை தேடும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
சிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேலின் 4 போர் விமானங்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த போதே ரஸ்ய போர் விமானம் காணாமல் போயுள்ளதனால் அது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.