மகசின் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளும், அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில்…..
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் இன்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த (14.09.18) ஆம் திகதியில் இருந்து இன்றுடன் 6 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 வருடங்களுக்கு மேலாக சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி யெஜச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளை நேற்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சென்று பார்வையிட்டிருந்தார். அவரும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு நடாத்தி இரண்டொரு நாளில் சாதகமான பதிலை தருவதாக கைதிகளிடம் கூறி சென்றுள்ளார்.
அவரின் வாக்குறுதியை நம்பி தமக்கு சாதகமான பதில் வரும் என எதிர்பார்த்து இன்று ஆறாவது நாளாக தமது உடல் சோர்வடைந்த நிலையில் உணவு தவிர்ப்பை தொடர்ந்து வருதாக சிறைச்சாலைத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.