மும்பை-அமதாபாத் இடையேயான புல்லட் புகையிரத திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1,000 விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். மராட்டிய மாநிலம் மும்பைக்கும், குஜராத் மாநிலம் அமதாபாத்துக்கும் இடையே 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபா செலவில் அதிவேக புல்லட் புகையிரத திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்துக்கு நிலம் எடுப்பதற்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ள நிலையில் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்து 1,000 விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
இந்த திட்டத்துக்காக நிலம் எடுப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றில் அவர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் அவகாசம் கேட்பதால், வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் உள்ளன.
பதில் மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கேட்பதால் கடந்த 5 வாரங்களாக இந்த வழக்கை விசாரிக்க முடியவில்லை. எனவே உயர்நீதிமன்றல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த 1,000 விவசாயிகள் தரப்பில் உச்சநீதிமன்றினை நாடி, இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோருவோம் என விவசாயிகள் தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கினை இன்று புதன்கிழமை அவசர வழக்காக விசாரிக்க முறையிடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.