முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கோரிக்கை விடுப்பாராயின், அவருக்கு காவல்துறைப் பாதுகாப்பு வழங்குவதற்கு, அரசாங்கம் தயாராக உள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது என, கோத்தபாய கருதுவாராயின், பாதுகாப்புக்கான கோரிக்கையை அவர் முன்வைக்க முடியுமெனவும் பிரதமர் நேற்றையதினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரைப் படுகொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டமை தொடர்பான சர்ச்சை, நாடாளுமன்றில் ஏற்பட்டபோதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர் தான் அறிந்ததன்படி, ஒன்றிணைந்த எதிரணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாகவே, கோத்தபாயவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியிருக்கும் எனவும் இவ்விடயத்தைப் பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட முயலாதீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணியின் வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு நீக்கப்பட்டபோது, தற்போது ஒன்றிணைந்த எதிரணியில் இருப்பவர்கள் அமைதியாக இருந்தனர் எனவும், இப்போது அவரது பாதுகாப்புத் தொடர்பில் அவர்கள் கவலையடைகின்றனர் எனவும், பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்
அத்தோடு, படுகொலைக்கான முயற்சிகள் தொடர்பில், தானும் ஜனாதிபதியும், ஏற்கெனவே விசாரணைக்காகப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும், பிரதமர் குறிப்பிட்டுள்ளார்