குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
Sep 19, 2018 @ 09:55
இராணுவத்தினரால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தம்மிடம் கையளிக்கப்பட்ட தனது மகனை மீள கைது செய்து எட்டு ஆண்டுகளாக தடுத்து வைத்துள்ளதாக அரசியல் கைதியின் தாயான சூரியகாந்தி மாரிமுத்து தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர்,
“42 வயதுடைய தனது மகன் சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரண்டைந்தார். சுமார் ஒரு வருட காலமாக புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் 05.04.2010 அன்று எம்மிடம் கையளிக்கப்பட்டர். எம்மிடம் கையளிக்கப்பட்ட நாள் முதல், இராணுவத்தினர், புலனாய்வாளர்கள் வீட்டுக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். அதனால் மகனுக்கு திருமண ஏற்பாடு செய்தோம். மகனுக்கு திருமண பேச்சுக்கள் முற்று பெற்று திருமண நிச்சயதார்த்தம் நிச்சயிக்கப்பட்டது.
அந்நிலையில் 25.09.2010 அன்று வீட்டுக்கு வந்து எனது பிள்ளையை கைது செய்து கொண்டு சென்றனர். இன்று வரை அவரை விடுதலை செய்யாது அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ளனர். எனது பிள்ளைக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒரு வழக்கு முடிவடைந்துள்ளது. மற்றைய வழக்கு நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனது மகனை துரித நடவடிக்கை எடுத்து சிறிய காலம் புனர்வாழ்வு அளித்தேனும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனக்கு ஐந்து பிள்ளைகள் சிறையில் உள்ளவர் நாலாவது பிள்ளை. மற்றைய பிள்ளைகள் திருமணம் முடித்து வாழ்கின்றனர். சிறையில் உள்ளவர் விழுப்புண் அடைந்து நடக்க முடியாது உள்ளவர். அவருக்கு திருமணம் நிச்சயித்த பெண் கூட வேறு திருமணம் செய்யாது என் பிள்ளைக்காக காத்திருக்கிறார். எனவே எமது பிள்ளைகளை பொது மன்னிப்போ, சிறிய கால புனர்வாழ்வு அளித்தோ விடுவிக்க வேண்டும் என கோருகிறோம்.
எமது பிள்ளைகளின் விடுதலைக்காக பல்கலை சமூகம், அரசியல் தலமைகள், சிவில் அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றினைந்து குரல் கொடுங்கள் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். குறித்த தாயின் மகனான சூரியகாந்தி ஜெயசந்திரன் அனுராதபுரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 8 அரசியல் கைதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.