குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
விடுவித்த காணியை மீண்டும் பிடிக்கச் சென்ற சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினருக்கும் மக்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டு சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி – சாந்தபுரம், அம்பாள்நகர் பகுதியில் காணப்படுகின்ற படித்த மகளீர் திட்டத்தில் வழங்கப்பட்ட தனியார் காணிகளை மீள்குடியேற்றத்தின் பின்னர் இராணுவத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
தற்போது குறித்த காணிகள் அவர்களால் விடுவிக்கப்பட்ட நிலையில் சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த காணியற்ற வறிய மக்கள் குறித்த காணியில் கொட்டில்களை அமைத்து குடியிருக்க முயன்றுள்ளனர். இதன் போது இன்றைய தினம் மீண்டும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தை சேர்ந்துவர்கள் அக்காணிகளை பிடிக்க முற்பட்ட போது மக்களுக்கும் அவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களின் குடிசைகளை பலவந்தமாக அகற்றியுள்ளனர் இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அவர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நிலையில் அங்கு காவற்துறையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்ப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டது.