குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தான் என்ன நிகழ்விற்கு வந்துள்ளேன் என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் மன்னார் நகர சபையின் முன்னால் தலைவரைப் பற்றியும், தற்போதைய தலைவராகிய என்னைப்பற்றியுமே கதைத்தாரே தவிர மன்னாரிற்கு அமைச்சர் றிஸாட் என்னத்தை செய்துள்ளார் என மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் கேள்வி எழுப்பிய நிலையில் சபையில் வாதி பிரதி வாதங்களும் சல சலப்பும் ஏற்பட்டது.
மன்னார் நகர சபையின் 7 ஆவது அமர்வு இன்று புதன் கிழமை(19) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்ற போதே இவ்வாறு வினவியுள்ளார்
மன்னாரில் அண்மையில் இடம் பெற்ற ஹஜ் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் றிஸாட் பதியுதீன் மன்னார் நகர சபை மற்றும் நகர சபையின் தலைவர் தொடர்பாக உரையாற்றியுள்ளார்.
-தான் என்ன நிகழ்விற்கு வந்துள்ளேன் என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் மன்னார் நகர சபையின் முன்னால் தலைவரைப் பற்றியும், தற்போதைய தலைவராகிய என்னைப்பற்றியுமே கதைத்தாரே தவிர மன்னாரிற்கு தான் பல அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வந்த போதும் அதற்கு முன்னால் நகர சபையின் தலைவர் தடை விதித்திருந்ததாகவும், தற்போதைய நகர சபையின் தலைவரும் அதைத்தான் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தான் அந்த அமைச்சரிடம் ஒரு விடையத்தை கேட்க விரும்புகின்றேன் எனக் கேட்ட அவர் ஏற்கனவே இருந்த நகர சபை தலைவரின் முற்பட்ட காலத்தில் அமைச்சர் இருந்திருக்கின்றார். அந்த அமைச்சர் மன்னார் நகரப்பகுதியிலே தன்னால் செய்து முடித்த வேலைத்திட்டங்கள் என்ன? அதன் பிற்பாடு நகர சபை ஆட்சி அமைத்த காலத்தின் அவர் செய்த வேலைத்திட்டம் என்ன? கடந்த நகர சபையின் ஆட்சிக்காலம் முடிவடைந்த பின்னர் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்ட நகர சபைக்கு அவர் அந்த காலத்தில் செய்த வேலைத்திட்டங்கள் தான் என்ன?
-நாங்கள் தற்போது என்ன அபிவிருத்தி திட்டங்களுக்கு தடையாக இருக்கின்றோம் என்னும் விடயங்களை அமைச்சர் தெளிவாக தெரிவிக்க வேண்டும் எனவும் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார். நாங்கள் நல்ல செயல்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்திலே இன்னும் நல்ல விடையங்களை செய்ய இருக்கின்றோம்.
-அந்த விடையங்களை தடுத்து நிறுத்துவதற்காக அமைச்சர் குறித்த விடையங்களில் ஈடுபடுகின்றார் என சந்தேப்படுகின்றோம். அண்மையில் மன்னார் நகர சபை பகுதியில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்த போது பல்வேறு இடைஞ்சல்கள் எமக்கு வந்தது. அதற்கு பின்னனியில் கூட இவர்தான் உள்ளாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
-இதன் போது பிரேரணையை முன் வைத்து உரையாடிய மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன்,,,,
-அமைச்சர் றிஸாட் பதியுதீன் மன்னார் மாவட்டத்திற்கும்,மன்னார் நகர பகுதிக்கும் பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்ற போதும்,அமைச்சர் எதனையும் செய்யவில்லை என கூறும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் தமிழ்,முஸ்ஸீம் மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளார் எனத் தெரிவ்த்த நிலையில் நகர சபையின் தலைவருக்கும்,குறித்த உறுப்பினருக்கும் இடையில் நீண்ட நேரம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இந்தநிலையில் நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் எழுந்து சபையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாத்திரம் பதில் சொல்வது நல்லது. தனிப்பட்ட பிரச்சினைகளை இதில் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு அபிவிருத்தி பணிகள் தொடர்பில் சபையில் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.