கேரள கன்னியாஸ்திரி மீதான பாலியல் பலாத்கார வழக்குத் தொடர்பில் இன்று விசாரணைக்கு முன்னிலையான பிஷப் பிராங்கோ முல்லக்கலிடம் நாளையும் விசாரணையை தொடர காவற்துறையினர் முடிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
கன்னியாஸ்திரியின் பாலியல் முறைப்பாடு கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தியதால், பிராங்கோ முல்லக்கல் இன்று விசாரணைக்கு நேரில் முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணை அனுப்பியதன் பெயரில் அவர் இன்று முன்னிலையானார்.
வைக்கம் துணை காவற்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் முன்னிலையான அவரிடம், காவற்துறை உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதாகவும் விசாரணையின் போது தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றைய விசாரணை முடிந்த நிலையில், அவரிடம் நாளையும் விசாரணை தொடரும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.