மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக அனைத்துப் பகுதி மக்களும் குடிநீர் பிரச்சனையால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வரட்சியின் காரணமாக மக்கள் நீரை பெற்றுக்கொள்ளுவதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் அப்பகுதி மக்களுக்கு முசலி பிரதேச சபையினால் நீர் வழங்கப்பட்டு வருகின்றது. எனினும் முசலி பிரதேச சபையினால் வழங்கப்படும் குடி நீருக்கு முசலி பிரதேச சபை பணம் அறவிடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
1000 லீட்டர் தாங்கியில் நீர் நிரப்புவதற்கு 300 ரூபாவும் 500 லீட்டருக்கு 150 ரூபாவும் 200 லீட்டருக்கு 80 ரூபாவும் வாளி குடங்களுக்கு 30 ரூபாவுக்கும் மேல் அறவிடப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் 5 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட குடும்பத்திற்கு 1000 லீட்டர் எத்தனை நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் எனவு கேள்வி எழுப்பியுள்ள மக்கள் பெருந்தொகையான பணம் செலவழித்து குடிநீர் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு தம்மிடம் வருமானம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். மக்கள் சேவைக்காக வந்த பிரதேச சபை குடி நீருக்காக பணம் அறவிடு செய்யும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மக்களின் பிரச்சினை தொடர்பாக முசலி பிரதேச சபையின் தலைவர் எம்.சுபிஹானை வினவிய போது,,,
முசலி பிரதேச சபைக்கு என வருமானங்கள் இல்லை. எரிபொருள் செலவு மற்றும் வாகன திருத்த வேலைகளுக்காக இவ்வாறு குடி நீருக்கு மக்களிடம் பணம் அறவிடப்படுகின்றது. பிரதேச சபையின் வருமானத்திற்காக மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது.
பிரதேசங்களில் குடிநீர் பிரச்சனை உள்ள இடங்களை தேசிய நீர் வழங்கல் சபையிடம் அடையாளப்படுத்தினால் அவர்கள் மக்களுக்கு இலவசமாகவே நீர் வினியோகம் செய்து கொடுப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.