பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அச்சுதானந்த் மிஸ்ராவின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் அவரை உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்றைதினம் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரில் எல்லைப் பாதுகாப்பு படையில் 2006-ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் மிஸ்ராவிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண் தன்னை ராணுவ செய்திகள் சேகரிக்கும் நிருபர் என்று அறிமுகம் செய்து நட்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு படை, காவல்துறை பயிற்சி மையம் மற்றும் வீரர்களுக்கான ராணுவ பயிற்சிகள், வெடிமருந்து கூடங்கள் போன்றவற்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை அந்த பெண்ணிடம் மிஸ்ரா பகிர்ந்து கொண்டுள்ளதுடன் பின்னர் வட்ஸ்-அப்பில் பாகிஸ்தானில் பதிவு செய்த ஒரு தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிஸ்ராவின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் அவரை உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்றையதினம் கைது செய்துள்ளனர். ராணுவம் பற்றிய ரகசிய தகவல்களை மிஸ்ரா பகிர்ந்து கொண்ட பெண் , பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யை சேர்ந்தவர் எனவும் இதற்காக மிஸ்ராவுக்கு வங்கிக் கணக்கில் பணம் எதுவும் செலுத்தப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் மாநில தலைமை காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.