குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சியில் உடைக்கப்பட்ட செங்கற்கள் 2010இல் அமைக்கப்பட்டவை என தொல்லியல் திணைக்கள மேற்பார்வை குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தமது அறிக்கையை திணைக்களத்திற்கு மேற்பார்வை குழு அனுப்பியுள்ளது. 2009இல் போரின் பின்னர், இலங்கை இராணுவத்தால் கிளிநொச்சி டிப்போ சந்தியில் தெற்கிலிருந்து கொண்டு வரப்பட்ட செங்கற்கள், ஆக்கிரமிப்பு சின்னங்களாக அமைக்கப்பட்டன.
கிளிநொச்சி நகர அபிவிருத்திக்கு குந்தகமாக இருந்த குறித்த கற்களை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையில் கரைச்சி பிரதேச சபை அகற்றியிருந்தது.
இது தொடர்பில் உண்மைக்கு புறம்பாக தென்னிலங்கை ஊடகங்களில் தொல்லியல் சின்னங்கள் உடைக்கப்பட்டதாக செய்திகள் வெளியனதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (18-09-2018) வவுனியாவிலிருந்து வருகை தந்த விசேட தொல்லியல் குழு ஒன்று நிலமையை நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது