இந்தியாவின் ஹரியாணா மாகாணத்திலுள்ள ரோஹ்டக் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முஸ்லிம்கள் தங்களது மத சடங்குகளை செய்வதற்கு கிராம பஞ்சாயத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பிபிசி செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த குறித்த கிராமத்தில் முஸ்லீம் சமுதாயத்துக்கு தலைமை வகிக்கும் ராஜ்பிர் கோக்கர் என்பவர் தங்களது கிராமத்தை சேர்ந்த முஸ்லீம்கள் தொழுகையை கிராமத்திற்கு வெளியே சென்று செய்யவேண்டும் அல்லது அருகிலுள்ள ரோஹ்டக் நகர பகுதிக்கு சென்று செய்யவேண்டுமென கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளதுடன் குற்றஞ்சாட்டப்பட்ட யாமீன் என்பவர் வாழ்நாள் முழுவதும் கிராமத்திற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கிராமத்திலுள்ள முஸ்லீம்கள் அமைதியான சூழலில் வாழ வேண்டுமென்று விரும்பியதால், கிராம பஞ்சாயத்தின் முடிவை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், மற்ற மதத்தை சேர்ந்த இளைஞர்களின் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் உதவுமா, இல்லையா என்பதனைக் காலம்தான் கூறும் எனவும் அமைதியை நிலைநாட்டவேண்டும் என்ற காரணத்தினால் இப்போதைக்கு இதனை எதிர்க்க விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற கட்டுப்பாடுகள் குறித்து கிராம பஞ்சாயத்து எவ்வித எழுத்துபூர்வமான உத்தரவையும் வெளியிடுவதில்லை எனவும், வாய்மொழியாக கூறப்படும் இவை கிராம காவலாளியால் அறிவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அதே கிராமத்தை சேர்ந்த இந்து சமூகத்தை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் தொழுகை செய்வதையோ, தாடி வளர்ப்பதையோ அல்லது தொப்பி அணிவதையோ கிராம பஞ்சாயத்து தடைசெய்யவில்லை எனவும் சுடுகாட்டை கிராமத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றுவது என்ற ஒரேயொரு முடிவு மட்டுமே பஞ்சாயத்தில் எடுக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.