ஒலுவில் மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக அடுத்த வாரம் அமைச்சரவை மூலம் தீர்வு காணப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
துறைமுக அபிவிருத்தி தொடர்பாக இன்று (20) பாரளுமன்ற குழு அறையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பினால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர் ஆகியோரும் கலந்துகொண்டு ஒலுவில் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
துறைமுகத்தை அண்டிய கடற்பரப்பில் மணல் குவிந்துள்ளதால், மீனவர்கள் படகுகளை செலுத்தும்போது அசௌகரியங்களை எதிர்கொள்கி வருகின்றதனால் மீன்பிடித்துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது. இப்பிரச்சினைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சருடனும் விரைவில் கலந்துரையாடப்படவுள்ளது.
இதுதவிர, ஒலுவில் 50 வீட்டுத் திட்டத்திலுள்ள மக்களுக்காக பாடசாலை, பள்ளிவாசல், முன்பள்ளி அமைப்பதற்கு பொதுக் காணிகளை வழங்கவேண்டும் எனவும், ஒலுவில் அல்ஆயிஷா வித்தியாலத்துக்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு அருகிலுள்ள காணியை வழங்கவேண்டுமெனவும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களால் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்தபின்னர், அவற்றை செய்து தருவதற்கு தான் தயாராகவிருப்பதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க இதன்போது தெரிவித்தார்.