செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக நாசா அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் (Curiosity_render) விண்கலம் சேமித்த தகவல்களை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீற்றர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஸ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் அமெரிக்கா கடந்த 2011-ம் ஆண்டு அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலம், 5 வருடங்களாக செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து பூமிக்கு அனுப்பி உள்ளது.
350 மில்லியன் மைல் (560 மில்லியன் கி.மீ) பயணம் மேற்கொண்டு 2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6ம் திகதியன்று வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கிய கியூரியாசிட்டி, மொத்த பணியில் 23 சதவிகிதத்தை முடித்துள்ளது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், சேமித்த தகவல்களை பூமிக்கு அனுப்ப முடியாமல் கியூரியாசிட்டி இயக்கத்தை நிறுத்தியுள்ளது.
இதனை, சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளதாகவும், விண்கலத்தின் சூரிய சக்தியை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.