1947 முதல் ஆட்சியமைத்த அனைத்து அரசாங்கங்களும் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டுமே வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, அம்மக்களின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அரசியல் பின்புலத்தை அமைக்கவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் அனைத்து அரசாங்கங்களும் குறைந்தளவு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி வடக்கு, கிழக்கு இனப் பிரச்சினைக்கு பல விடயங்கள் அடிப்படையாக இருந்தபோதிலும் தகுந்த அரசியல் தலைமை அப்பிரதேசங்களில் பிரதிபலிக்காதது முக்கிய காரணமாக அமைந்துள்ளதென்றும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘சிறிசர பிவிசும’ அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக நிறைவு செய்யப்பட்ட பல செயற்திட்டங்கள் இன்று (20) மக்களிடம் கையளிக்கும் நிகழ்வின்போதே ஜனாதிபதி ; மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒரு மாகாணத்தை, அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு அம்மாகாணத்தில் குறைந்தபட்சம் ஓரு அமைச்சரவை அமைச்சுப் பதவியாவது வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி நாட்டை பிளவுப்படுத்தாத அதிகார பகிர்வு எனப்படும் எண்ணக்கரு அப்போதே யதார்த்தமாகுமென்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் இடம்பெறும் ‘சிரிசர பிவிசும’ செயற்திட்டத்தின் ஜனாதிபதி செயலகத்தால் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த நிதியினால் திருகோணமலை மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் நினைவுப் பலகையை திறந்து வைத்ததுடன் புனரமைக்கப்பட்ட குளத்தை மக்களிடம் ஜனாதிபதி ; கையளித்தார் எனவும் தெரிவிக்கப்ப்டுள்ளது.
தொடர்ந்து இடம்பெற்ற வைபவத்தில் கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு 30 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்களை ஜனாதிபதி வைத்திய நிபுணர் டீ.ஜீ.எம்.கொஸ்தாவிடம் கையளித்தார்.