குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முசலி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கிராம அலுவலகர் ஒருவரை மன்னார் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (20) பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. முசலி பண்டாரவெளி கிராமத்தை சேர்ந்த கிராம அலுவலகருக்கு எதிராக பூ நொச்சிக்குளம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அப்பகுதியில் மேற்கொள்ள இருக்கும் வீட்டுத் திட்டம் தொடர்பாக முசலி பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
மக்களின் முறைப்பாட்டிற்கு அமைவாக குறித்த கிராம அலுவலகரை பிரதேச செயலாளர் முசலி பிரதேச செயலகத்தில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை(18) விசாரணைக்குட்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது குறித்த கிராம அலுவலகர் பலத்த சத்தமிட்டு தகாத வார்த்தைகளால் திட்டி பிரதேசச் செயலாளரை தாக்குவதற்கு முற்படுகையில் சக பணியாளர்கள் தடுத்த நிறுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் உடனடியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு,சிலாபத்துறை காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் சிலாபத்துறை காவல்துறையினர் குறித்த கிராம அலுவலகரை நேற்று வியாழக்கிழமை(20) கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது குறித்த கிராம அலுவலகர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
குறித்த கிராம அலுவலகருக்கு எதிராக முசலி பிரதேசச் செயலகத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.