ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசே பரிந்துரை செய்தது என பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹொலண்டே தெரிவித்துள்ளார். இதன் மூலம் மோடி அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது
.2016ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கு பங்கேற்பதற்காக ஹொலண்டே இந்தியா சென்றிருந்தபோது பிரதமர் மோடி மற்றும் ஹொலண்டே ஆகியோருக்கிடையே 36 ரபேல் விமானங்களை வாங்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. டாசோல்ற் ஏவியேசன் (Dassault Aviation )மற்றும் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் அரசுத்துறை நிறுவனமும் இணைந்து ரபேல் போர் விமானங்களை தயாரிப்பதாக இருந்தது.
ஆனால் மோடி அரசே அந்த ஒப்பந்தத்தை மாற்றி விட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி அம்பானி குழுமத்தை இந்த ஒப்பந்தத்திற்குள் கொண்டுவந்தது மோடி அரசே என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹொலண்டே பிரான்ஸின் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், பிரான்சிற்கு வேறு எந்த ஒரு வாய்ப்போ தெரிவோ வழங்கப்படவில்லை எனவும், அம்பானி குழுமத்துடன். மட்டுமே இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது எனவும், தெரிவித்துள்ளார்.
இந்தப் பேட்டியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி, மத்திய அரசு மீது குற்றஞ் சாடியுள்ளது. மோடி அரசு பின்னிய பொய் வலைகளை பிரான்ஸ் ஜனாதிபதி; பிராங்கோயிஸ் ஹொலண்டே அம்பலப்படுத்தி உள்ளார். இந்த ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் குழுமத்தை இணைத்து வைத்தது மோடி அரசே என காங்கிரஸ் வெளியிட்ட ருவீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 ரஃபேல் போர் விமானங்கள் 59 ஆயிரம் கோடி பெறுமதிக்கு வாங்குவது என 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ஓவ்செற் புரோக்ராம் செய்ய இணைக்கப்பட்டது. ரிலையன்ஸ் 51 சதவீத பங்குகளும், . டாசோல்ற் ஏவியேசன் 49 சதவீத பங்குகளும் வைத்திருப்பது என முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது