Home இலங்கை திசை திருப்பும் முயற்சி – பி.மாணிக்கவாசகம்

திசை திருப்பும் முயற்சி – பி.மாணிக்கவாசகம்

by admin

நீறுபூத்த நெருப்பாக உள்ள அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் ஒரு முறை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல தடவைகள் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. சிறைச்சாலைகளுக்குள்ளேயும், அவர்களுக்கு ஆதரவாக வெளியிலும் இந்த போராட்டங்கள் வலுவாக நடத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் அரசாங்கம் அக்கறையற்ற விதத்திலேயே நடந்து கொண்டிருக்கின்றது. மேலோட்டமான பார்வையில் இதனை ஒரு சுரணையற்ற போக்கு என்றுகூட குறிப்பிடலாம். ஆனால் உண்மையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் இனவாத அரசியல் போக்கின் அடிப்படையில் இராஜதந்திர ரீதியான ஓர் அணுகுமுறையைப் பின்பற்றியிருப்பதையே நுணுகி நோக்க முடிகின்றது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களே இந்த அரசியல் கைதிகளாவர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக இன்னும் வழக்கு தாக்கல் செய்யப்படாமல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுகூலங்களின் பலர் பல வருடங்களாகத் தடுத:;து வைகக்கப்பட்டுள்ளார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மிக மோசமான பிரிவுகளில் ஒன்றாகிய ஒப்புதல் வாக்குமூல சாட்சியத்தின் மூலம் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை அனுபவிப்பவர்களும் இருக்கின்றார்கள்.

அரசியல் கைதிகள் சாதாரண சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களல்ல. சாதாரண சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டவர்களுமல்ல. தமிழ் மக்களின், மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆயுதமேந்தி அரசுக்கு எதிராகப் போராடிய விடுதலைப்புலிகளை அடக்கி ஒடுக்குவதற்காக விசேடமாக, அதுவும் தற்காலிக ஏற்பாடாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், அவசரகாலச் சட்டத்தையும் துணையாக இணைத்துக் கொண்டு இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்: தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றார்கள்.

விடுதலைப்புலிகள் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது ஆயுத ரீதியாகச் செயலிழக்கச் செய்யப்பட்டார்கள். அரச தரப்பினுடைய பாணியில் சொல்வதானால், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நடத்தப்பட்ட யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. எனவே, யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட தினமாகிய 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியுடன் பயங்கரவாதத் தடைச்சட்டமும், அவசரகாலச் சட்டமும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அரசியல் கைதிகளின்; விடயத்திற்கும் முடிவு காணப்பட்டிருக்க வேண்டும்.

அரசியல் உரிமைகளுக்காக, முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே முப்பது வருடங்களாக யுத்தம் தொடர்ந்து நடத்தப்பட்டது. அதுவும், நாட்டில் உள்ள தனது குடிமக்களின் ஒரு பகுதியினர் சார்பில் நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதற்காகவே யுத்தம் நடத்தப்பட்டது. அரசியல் உரிமைக்கான அந்த ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து, சர்வதேச அளவிலான ஒரு குற்றச்செயலாக அதற்கு ஓர் அந்தஸ்தை வழங்கிச் செயற்பட்டு, அந்த யுத்தத்தில் வெற்றிபெற்ற அரசாங்கம், வெற்றி பெருமிதத்திலும் மனிதாபிமான ரீதியில் நடந்து கொண்டிருக்க வேண்டும்.

ஓர் அரசாங்கம் என்ற வகையில் பாதிக்கப்பட்ட தனது நாட்டின் ஒரு பிரிவினராகிய குடிமக்கள் மீது தனக்குள்ள அக்கறையையும், கரிசனையையும் இந்த மனிதாபிமானத்தின் மூலம் வெளிப்படுத்தும் வகையில் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. அவ்வாறு அரசாங்கம் நடந்து கொள்ளவில்லை. மாறாக அந்த அரசியல் கைதிகள் மீது பகைமை பாராட்டும் வகையிலேயே நடந்து கொண்டது. யுத்தம் முடிவுக்கு வந்து பத்து வருடங்களாகப் போகின்ற நிலையிலும், அந்தப் போக்கில் இன்னுமே மாற்றம் ஏற்படவில்லை. பகைமை பாராட்டுகின்ற இந்தப் போக்கு சட்டம், ஒழுங்கு, நீதி என்ற விடயங்களை, அரசு தனது பேரினவாத அரசியல் போக்கிற்கு சாதகமாகப் பயன்படுத்தி யுபோர்க்குற்றம் புரிந்தவர்களைப் பாதுகாக்கின்ற நீண்டநாள் திட்டத்தின் கீழ் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

விருப்பமில்லாத போக்கா விபரீதமான போக்கா?

பயங்கரவாதம் என சித்தரிக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களின் முப்பது வருடகால ஆயுதப் போராட்டம், அவ்வப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கங்களை ஆட்டிப்படைத்து விழி பிதுங்கச் செய்திருந்தது. இதனால், விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கும், அவர்களுடைய அரச எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் பல்வேறு இராணுவோபாயங்களின் மூலம் முன்னெடுத்திருந்தது. அவற்றில் அதீத சக்தியைப் பயன்படுத்துவது ஒரு முக்கிய உத்தியாகப் பயன்படுத்தப்பட்டது.

அதன் ஓர் அம்சமாகவே விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்றும், அவர்களுக்கு உதவி புரிபவர்கள் என்றும் சந்தேகிக்கப்ட்;டவர்களுக்கு எதிராகவும், அவர்களுக்கு ஆதரவான மனப்போக்கைக் கொண்டவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விசேட அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த வகையிலேயே பலர் சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்;டார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களே நீண்ட காலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

பயங்கரவாதம் என்றால் என்ன, பயங்கரவாதி என்றால் யார் என்பதற்கு உரிய வரைவிலக்கணம் இல்லாத நிலையிலேயே பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ் இளைஞர் யுவதிகள் மீது பாய்ந்தது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், ஆயுதமேந்தி படையினருக்கு எதிராக போர்புரிந்த முன்னாள் போராளிகள் பதினோராயிரம் பேரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ததாக் பெருமையாகக் கூறுகின்ற அரசாங்கம், சந்தேகத்தின் பேரில் கைது செய்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை காலம் கடந்த நிலையிலும் விடுதலை செய்வதற்குத் தயாராக இல்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகள். அவர்களை விடுதலை செய்தால், நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கச் செய்வதற்கு வழிவகுத்ததாக முடியும். எனவே, அவர்களை விடுதலை செய்வது தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாடாகக் காரணம் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், பயங்கரவாதிகளே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று பிடிவாதமாகக் கூறி வருகின்றது.

மறுபுறத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் அவர்களுக்கு அளவில்லாத சேதங்களை விளைவிப்பதற்கும் வைத்தியசாலைகள், நிவாரண உதவிகளைப் பெறுவதற்காக பொதுமக்கள் கூடுகின்ற இடங்கள் போன்ற சிவில் இலக்குகள் மீது
அரச படைகள் தாக்குதல்களை நடத்தி பொதுமக்களுக்குச் சேதங்களை ஏற்படுத்தி விடுதலைப்புலிகளை நெருக்கடிகளுக்குள்ளாக்கும் தந்திரோபாயச் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தன. இத்தகைய நடவடிக்கைகளையே சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கான அமைப்புக்களும் அளவுக்கு அதிகமான இராணுவ பலப் பிரயோகம் செய்திருந்ததாகச் சுட்டிகாட்டி குற்றம் சுமத்தியிருக்கின்றன.

அதீத இராணுவ சக்தியைப் பயன்டுத்குகின்ற போக்கையும் அரச படைகள் கடைப்பிடித்திருந்தன என்பது அரச படைகள் மீதான மற்றுமொரு குற்றச்சாட்டாகும். வான்வழி தாக்குதல்கள், கடற்படைக் கப்பல்கள், பீரங்கிப்படகுகளில் இருந்து நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்கள் மட்டுமல்லாமல், பலத்த சேதத்தை ஏற்படுத்துவதற்கென்றே சுயமாகத் தயாரிக்கப்பட்ட பரல் குண்டுகள், இரசாயன குண்டுகள், எரிகுண்டுகள் என்பன பயன்படுத்தப்பட்டதாக அரச படைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், பொது அமைப்புக்களும் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுக்களே இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றச்சாட்டை எதிர்கொள்ளச் செய்திருக்கின்றது.

விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே அரச படைகள் போரிட்டன. பொதுமக்களாகிய தமிழ் மக்களுக்கு எதிராகப் போர் புரியவில்லை என்றும், ஒரு கையில் ஆயுதமும், மறு கையில் மனிதாபிமானத்தையுமே ஏந்தி இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்று முன்னைய அரசாங்கம் பிரசாரம் செய்து வந்தது. நல்லாட்சி அரசாங்கமும் அந்த வழியைப் பின்பற்றியே செயற்பட்டு வருகின்றது. இராணுவத்திற்கு எதிராக எந்த நிலையிலும் குற்றங்கள் சுமத்தப்படமாட்டாது. எந்த இராணுவ வீரரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படமாட்டார்கள். அவர்கள் எவரும் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடித்துக் கூறி வருகின்றார்.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் என்பவற்றில் படையினர் ஈடுபட்டிருந்தார்கள் என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமாக இதனைக் கருத முடியும். சர்வதேச அளவில் கடப்பாட்டுக்கு உள்ளாகியிருக்கின்ற அரசாங்கம், பொறுப்புகூறல் செயற்பாட்டில், இராணுவத்திற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கமாட்டாது என்பதை ஜனாதிபதி, பிரதமர் மட்டுமல்லாமல், அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களும் உறுதியாகக் கூறி வருகின்றார்கள். பொறுப்பு கூறும் செயற்பாட்டில் இதுவே தமது நிலைப்பாடு என்பதையும் அரசாங்கம் இதனூடாக வெளிப்படுத்தி இருக்கின்றது.

இந்த நிலைப்பாட்டில் முன்னேறிச் செல்வதற்காகவே, தமிழ் அரசியல் கைதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற புதிய கோரிக்கை எழுந்திருக்கின்றது. கடந்த ஒன்பது வருடங்களாக இத்தகைய கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. அதேபோன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே, அரசியல் கைதிகளைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கின்ற படையினருக்குப் பொதுமன்னிப்பு அளிப்பதே அரசாங்கத்தின் நீண்டகால நோக்கமாக இருந்து வந்துள்ளதோ என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

யாருக்கு பொதுமன்னிப்பு – தண்டனை அனுபவிப்பவர்ளுக்கா, தண்டனை பெறாதவர்களுக்கா?

அரசியல் கைதிகளுக்கும் இராணுவத்திற்கும் சேர்த்து பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற புதிய யோசனை – புதிய கோரிக்கை வேடிக்கையானது. விபரீதமானது என்றே கூற வேண்டும். அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்துள்ள இந்த யோசனைக்கு எதிர்;ப்பு கிளம்பியிருக்கின்றது என்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களில் ஈடுபட்டிருந்த படைத்தரப்பினர் தண்டனை பெறுவதில் இருந்து தப்பியிருக்கின்ற கலாசாரத்தின் கீழ் எந்தவிதமான பாதிப்புகளுமின்றி சுதந்திரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட படையினரை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே சர்வதேசமும், ஐநா மனித உரிமைகள் பேரவையும் வலியுறுத்தி வருகின்ற பொறுப்புகூறல் கடப்பாட்டின் சாராம்சமாகும்.

குற்றம் செய்த படையினரே விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். குற்றம் செய்யாதவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்பது சாதாரண நியதியாகும். இதனை அனைவரும் நன்கு அறிவார்கள். ஆனால் இலங்கையின் பொறுப்பு கூறல் என்பது அரச படைகள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்குகின்ற ஒரு கைங்கரியமாகப் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது.

உண்மைக்கு மாறானதும், நடைமுறையில் இல்லாததுமான இந்த நடைமுறை குறித்த பிரசாரம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது அவசியம். பொறுப்பு கூறுகின்ற விடயத்தில் முதலாவது நடவடிக்கையாக இது உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். பொறுப்புகூறலின் உண்மையான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டுமேயல்லாமல், அதனைத் திரித்துக்; கூறி பெரும்பான்மையினராகிய சிங்கள மக்களை பிழையாக வழிநடத்தக் கூடாது.

தமிழ் அரசியல் கைதிகளையும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இராணுவத்தினரையும் ஒரே நிலையில் வைத்து அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆலோசனை முழு இராணுவத்திற்கெதிராகவும் விசாரணைகள் நடத்தப்படுவதே பொறுப்பு கூறலின் நோக்கம் என்ற பிரசாரத்தின் அடிப்படையிலானது.

அரசியல் போராட்டத்தின் ஓர் அம்சமாக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களே அரசியல் கைதிகளாவர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் விசேட சட்டமாகிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள் அல்லது பயங்கரவாதிகளுக்கு உதவியிருந்தார்கள், ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள் என்ற தோரணையிலேயே அவர்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

அத்தகைய விசாரணைகளின் பின்னர், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலமே அவர்களுக்கு எதிரான சாட்சியங்களாகப் பயன்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. ஒப்புதல் வாக்குமூலம் என்பது தனக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்படுவதற்கும் தண்டனை வழங்கப்படுவதற்கும் மனம் ஒப்பி வழங்குகின்ற சுயமான சாட்சியமாகும். நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வந்துள்ள அரசியல் உரிகை;கான போராட்ட நடத்தப்படுகின்ற சூழலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எவரும், தனக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மனம் ஒப்பி, ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதில்லை.

அவ்வாறு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் சித்திரவதை செய்த பின்னரே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இயல்பான நிலையில் மனமுவந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படவில்லை என்பது பல வழக்குகளில் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டு அல்லது கண்டறியப்பட்டு, குற்றம்சாட்டப்பட்ட பலர் நீதிமன்றங்களினால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

விசாரணையின்போதே தண்டனை

இது ஒரு,புறமிருக்க, பயங்கரவாதத் தடைச்சடத்தின் கீழ் வெறுமனே சந்தேகத்தை மட்டுமே ஆதாரமாகக கொண்டு கைது செய்யப்பட்டவர்கள் மீது நீண்ட நெடும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இதற்கு அந்தச் சட்டத்தில் உள்ள சட்டப்பிரிவுகள் படையினருக்கு அவசியமான அதிகாரங்களை வழங்கியிருக்கின்றன. கைது செய்யப்படுவதற்கு ஏதுவான சந்தேகத்தை, நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிப்பதற்குத் தேவையான உறுதியான ஆதாரங்களைத் தேடிக் கண்டறியப்படுவதற்காகவே இந்த நீண்ட விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

இந்த விசாரணைக்காலம் நாட்கணக்கிலானதல்ல. மாதக்கணக்கிலானதுமல்ல. வருடக்கணக்கான காலப்பகுதியிலேயே அந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த விசாரணை காலத்தில் சந்தேக நபர்களான அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் அதிகூடிய பாதுகாப்பு பிரிவில் தடுத்து வைக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கு எதிரான விசாரணைகளின்போது பல்வேறு சித்திரவதைகளும் சித்திரவதை அணுகுமுறைகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த சித்திரவதைகள் பற்றிய ஆதாரபூர்வமான பல விபரங்கள் ஏற்கனவே வெளிவந்திருக்கின்றன. அந்த வரிசையில், சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் முதன்மை நிலையில் உள்ள உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் தலைவியாகிய யஸ்மின் சூக்கா ஆண் கைதிகள் மீது படையணியைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் பாலியல் ரீதியான சித்திரவதைகளை மேற்கொண்டிருந்தனர் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல்களை ஜெனிவாவில் வெளியிட்டிருக்கின்றார்.

விசாரணை காலத்தில் அரசியல் கைதிகள் எத்தகைய மோசமான நிலைமைக்கு ஆளாக்கப்படுகின்றார்கள் என்பதற்கு யஸ்மின் சூக்காவின் பிந்திய அறிக்கையைவிட வேறு ஆதாரங்கள் அவசியமில்லை. எனவே, என்ன குற்றம் செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டுக்களும், விசாரணைகளும் இல்லாமலே நீதிமன்ற விசாரணைக்கு முன்னரும், நீண்ட கால தாமதம் கொண்ட நீதிமன்ற விசாரணையின் போதும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் வழக்கு தீர்ப்பு வருவதற்கு முன்பே அதீத அளவிலான தண்டனையை அனுபவிக்கின்றார்கள்.

வழக்கு விசாரணைகளின் போது, மிக நீண்ட விசாரணை காலத்தில் அனுவித்த சிறைவாசம் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. விசாரணைகளின் பின்னர் நீதி வழங்கப்படும்போது, அவர்கள் முழு அளவிலான தண்டனையையே அனுபவிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். அவர்கள் அந்த வழக்கு முடியும் வரையில் அனுபவித்த அதிகாரபூர்வமற்ற சிறைத் தண்டனை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. தீர்ப்புகளில் அளிக்கப்படுகின்ற தண்டனைக்கு மேலதிகமாக அவர்கள் ஏற்கனவே அனுபவித்த தண்டனை சட்ட ரீதியாகவும்சரி, மனிதாபிமான ரீதியாகவும்சரி கணக்கில் எடுக்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் இரட்டை தண்டனை முறைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். வழக்கு தாக்கல் செய்யப்படாமல் விசாரணை நிலையில் உள்ள அரசியல் கைதிகள் நீதிமன்றத்திற்குச் செல்லாமலே சிறைத் தண்டனை அனுபவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இத்தகயை நிலையில் உள்ள அரசியல் கைதிகளே பொதுமன்னிப்பின் அடிப்படையில், தமக்கு குறுகிய கால புனர்வாழ்வு தண்டனையை வழங்கி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு ஆதரவாக பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலதரப்பினரும் வடக்கில் போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றார்கள்.

தண்டனை அனுபவிப்பவர்களுக்கே பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இதே பொது மன்னிப்பை சர்வதேச அளவில் கணிக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு விசாரணைகளையே எதிர்கொள்ளாமல் தண்டனை பெறுவதில் இருந்து தப்பியிருப்பவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரியிருப்பது எந்த வகையில் நியாயமானது என தெரியவில்லை.

தமிழ் அரசியல் கைதிகள் நியாயமான முறையில் விடுதலை செய்யப்பட வேண்டியது அவசியம். அதனை திசைதிருப்பி அவர்களுடைய விடுதலையை கிடப்பில் போடுவதற்கான முயற்சியாகவே படையினருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் திசை திருப்பும் முயற்சிக்கு இடமளிக்காமல் அரசு தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய முன்வர வேண்டும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More