ரஸ்ய ராணுவ ஒத்துழைப்பில் தலையிட அமெரிக்காவுக்கு உரிமை இல்லை என சீன ராணுவ செய்தி தொடர்பாளர் வு கியான் தெரிவித்துள்ளார். ரஸ்யாவிடம் இருந்து சீனா அதிநவீன போர் விமானங்களையும், வான் பாதுகாப்பு ஏவுகணைகளையும் வாங்கி உள்ளமையானது அமெரிக்காவுக்கு விசனத்தை ஏற்படுத்தியதன் காரணமாக சீனா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ள நிலையிலேயே சீன ராணுவ செய்தி தொடர்பாளர் நேற்றையதினம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவிடம் இருந்து சீனா போர் விமானங்களையும், வான் பாதுகாப்பு ஏவுகணைகளையும் வாங்க முடிவு எடுத்தமையானது வழக்கமான நடவடிக்கைதான். இறையாண்மை கொண்ட இரு நாடுகள் இடையேயான ஒரு ஒத்துழைப்பு செயல்பாடே இது. இதில் தலையிட அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் அணுகுமுறையானது, சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகளின் ஒரு அப்பட்டமான மீறல் ஆகும். ஒரு மேலாதிக்கத்தின் முழுமையான வெளிப்பாடும் ஆகும். இரு நாடுகள் மற்றும் இரு ராணுவங்கள் இடையேயான உறவுகளில் கடுமையான மீறலும்கூட எனவும் குறிப்பிட்டுள்ளார்.