திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் அதன்பின் யாழ்.மாநகரசபை வெளியிட்ட அறிக்கையும் இக்கட்டுரையை எழுதத்தூண்டின. நினைவிடம் அமைந்திருப்பது மாநகர சபை எல்லை என்பதால் அந்த இடத்திற்கும் நிகழ்வுக்கும் மாநகரசபை உரிமைகோருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலின் போது மாகாணசபையும் அப்படி உரிமைகோரியது. முள்ளிவாய்க்கால் நிலத்துண்டு பிரதேசசபை எல்லைக்குள் அமைந்திருப்பதால் பிரதேசசபை அதை அனுஷ்டிக்கும் என்றும்பிரதேச சபை நிர்வாகம் மாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருவதால் நினைவு கூர்தலை மாகாணசபை நடத்தும் என்று ஒருவிளக்கம் தரப்பட்டது. அதுபோலவே கிளிநொச்சியில் மாவீரர் துயிலுமில்லத்தை கரைச்சி பிரதேசசபை பொறுப்பெடுக்க முற்பட்டது சர்ச்சையை உண்டாக்கியது. இவ்வாறான சர்ச்சைகள் ஏன் ஏற்படுகின்றன? பின்வரும் காரணங்களைக் கூற முடியும்.
1. எல்லாத்தரப்பையும் ஒருங்கிணைக்கவல்ல ஒருபெருந்தலைமை தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.
2. நினைவு கூர்தல் என்றால் என்னஎன்பதுபற்றியபொருத்தமானவிளக்கம் இன்மை.யாரை, யார்,எதற்காகநினைவு கூர்வது?
3. நினைவு கூர்தலில் உள்ள பல்வகைமையை விளங்கிக் கொள்ளாமை, ஏற்றுக்கொள்ளாமை. அதாவதுஒருநினைவு கூர்தல் அல்லபலநினைவு கூர்தல்கள் உண்டுஎன்றவிளக்கம் இன்மை
4. நினைவு கூர்தலைஒருபொதுமக்கள் நிகழ்வாகக் கருதாமல் கட்சிநிகழ்வாகக் குறுக்குவது.எந்தக்கட்சிமுதலில் நினைவு கூர்ந்துஅதைபடம் எடுத்துமுகநூலிலும் இணையஊடகங்களிலும் போடுவதுஎன்றபோட்டி.
5. சிலநினைவு கூர்தல்களில் சிலகட்சிகள் அல்லது இயக்கங்களுக்கு பங்கெடுக்க உரிமையோ தகுதியோ இல்லை என்ற ஒருவாதம்
6. டயஸ் பொறாவில் உள்ள பணவலிமை கொண்ட சிலதரப்புக்கள் தாயகத்தில் நினைவு கூர்தல்களை ஒழுங்குபடுத்த முயற்சிப்பதும் தாயகத்தில் இதில் சம்பந்தப்படும் தரப்புக்களைரிமோர்ட் கொன்ரோல் செய்யமுயற்சிப்பதும்.
7. சிலமக்கள் பிரதிநிதிகள் சிலநினைவு கூர்தல்களைத் தத்தெடுக்க முயற்சிப்பதும் அதில் ஏனையவர்கள் தலையிடுவதைத் தடுப்பதும்.
8. அரசபுலனாய்வுத்துறையின் செயற்பாடுகள்.
மேற்படி காரணங்களினால் தாயகத்திலும், டயஸ்பொறாவிலும் நினைவு கூர்தல் எனப்படுவது சமூகத்தைப் பிரிக்கும் ஒருநிகழ்வாக மாறிவிட்டது. அது இறந்தவர்களைகௌரவிக்கும் ஒருநிகழ்வாஅல்லதுஅவமதிக்கும் ஒருநிகழ்வா என்றுகேள்விகேட்குமளவுக்கு நிலமைகள் காணப்படுகின்றன. வருமாண்டுகள் தேர்தல் ஆண்டுகளாக இருக்கலாம் என்ற ஓர்ஊகத்தின் அடிப்படையில் சிந்தித்தால் இனிவரும் நினைவு கூர்தல்களில் முன்னரைவிடக் கூடுதலானகுழப்பங்களுக்கும் பூசல்களுக்கும் இடமுண்டு. இக்குழப்பங்கள் கடந்தஆண்டுமட்டக்களப்பில் அன்னைபூபதிநினைவுதினத்தன்றுபொலிஸை வரவழைக்கும் ஒருவிகாரவளர்ச்சிக்கு இட்டுச் சென்றன. வருங்காலங்களில் இது போன்றகுழப்பங்கள்,ஏற்படுவதைத் தடுப்பதற்குஎன்ன வழி?
ஒருபொதுஏற்பாட்டுக்குழுவைஉருவாக்கினால்நினைவுகூர்தல்கள் ஓர் ஒழுங்கிற்குள் வரும் என்று கூறப்படுவதுசரியா?ஒரு பொது ஏற்பாட்டுக்குழுவை உருவாக்கினால்மட்டும் இக்குழப்பங்கள் தீர்ந்துவிடுமா? ஏனெனில் நினைவு கூர்தல் எனப்படுவது ஒருதரப்புடன் மட்டும் சம்பந்தப்படுவதுஅல்ல. யாரைநினைவு கூர்வது? யார் யார் நினைவு கூர்வது? போன்றவிடயங்களில் பல்வகைமைஉண்டு. ஒற்றைப்படையாகஒருபொதுக்குழுவைஉருவாக்கிஅக்குழுவேஎல்லாநினைவு கூர்தல்களையும்பொறுப்பேற்பதுநடைமுறைச் சாத்தியமற்றது. ஏனெனில் நினைவு கூரப்படுவோர் பலவகைப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள். அதில் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உண்டு. பொதுமக்களும் உண்டு. இது பிரதானமானஒருவகைப்பாடு.இதைவிடபல உப வகைகள் உண்டு. அவையாவன
1. இயக்கத்திலிருந்துபடையினரால் கொல்லப்பட்டவர்
2. இயக்கத்திலிருந்துதனது இயக்கத்தாலேயே கொல்லப்பட்டோர். அதாவது உள் இயக்கச் சண்டையில் கொல்லப்பட்டவர்.
3. இயக்கச் சண்டைகளில் வேறு இயக்கத்தால் கொல்லப்பட்டவர்
4. இந்தியஅமைதிகாக்கும் படையால் கொல்லப்பட்டவர்
5. துணைக் குழுக்களால் கொல்லப்பட்டவர்
6. இயக்கங்களால் கொல்லப்பட்டபொதுசனம்
7. யார் கொன்றது யார் கடத்தியதுஎன்றுதெரியாமல் கொல்லப்பட்டோர்,காணாமல் போனோர்.
மேற்படிவகைகளைச் சேர்ந்தவர்களைஅவர்களுடையதனிப்பட்டஉறவினர்நண்பர்கள் நினைவு கூர்வதுண்டு. அவர்கள் சார்ந்த இயக்கங்கள் கட்சிகள் நினைவு கூர்வதுண்டு. ஒரு இயக்கம் அல்லதுகட்சிநினைவு கூரும் ஒருவரைவேறு இயக்கம் அல்லதுகட்சிதுரோகிஎன்றுகூறும் ஒருநிலமையும் உண்டு. எனவேதொகுத்துப் பார்த்தால் நினைவு கூர்தலைதட்டையாகப் பார்க்கமுடியாது. அதைஒற்றைப்பரிமாணத்தில் விளங்கிக் கொள்ளமுடியாது. அதை அதற்கேயான பல்வகைமைக் கூடாகவிளங்கிக் கொள்ளவேண்டும். அதுதான் நினைவு கூர்தலில் எழக் கூடியகுழப்பங்களையும், பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குரியமுதலாவதுமுக்கியநிபந்தனை. இதன்படியாருக்கும் யாரையும் நினைவு கூரஉரிமைஉண்டு. அதையாராலும் தடுக்கமுடியாது. ஆனால் இதன் அர்த்தம் யாரும் யாருடையதியாகத்தையும் தமதுவாக்குவேட்டைஅரசியலுக்காகத் துஷ்பிரயோகம் செய்யலாம் என்பதல்ல.ஆயின் தேர்தல் மையக் கட்சிகளைஅதிகமாகக் கொண்ட ஓர் அரசியல் அரங்கில் தியாகிகளைநினைவு கூர்வதன் மூலம் தமதுவாக்குவங்கியைபலப்படுத்தும் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்துவதுஎப்படி?
அதற்குத்தான் ஒருபொதுஏற்பாட்டுக்குத் தேவைஎன்று கூறப்படுகிறது. எந்தஎந்தநினைவு கூர்தல்களைஅரசியல்வாதிகள் துஷ்பிரயோகம் செய்யமுடியுமோஅவற்றைஒருபொதுக்குழுபொறுப்பேற்கலாம். ஆனால் இங்கேயும் பிரச்சினைஎழும். ஒவ்வொரு இயக்கமும் தனக்கென்றுதியாகிகள் தினத்தைஅனுஷ்டித்துவருகிறது. இதில் ஒரு இயக்கத்தின் தியாகியை இன்னொரு இயக்கம் துரோகிஎன்று கூறக்கூடியநிலமையும் உண்டு. ஆயின் எல்லா இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் தியாகிகளைமேற்படிபொதுக்குழுபொறுப்பேற்கமுடியுமா?
முடியாது. ஒவ்வொரு இயக்கமும் தனக்குரியதியாகிகள் தினத்தைத் தனித்தனியாகஅல்லதுவிரும்பினால் கூட்டாகஅனுஷ்டிக்கட்டும். ஒவ்வொரு இயக்கத்தினதும் தனித்தனிதியாகிகளையும் அதுசார்ந்தஅமைப்புக்களேநினைவு கூரட்டும். அதேசமயம் மேற்படிதியாகிகளைநினைவு கூர விரும்பும் பொதுசனங்களையோவேறு இயக்கங்களையோஅல்லதுகட்சிகளையோ,அமைப்புக்களையோதடுக்கக்கூடாது. குறிப்பிட்டதியாகியின் குடும்பத்தினரும் நண்பர்களும் நினைவு கூர்வதையும் தடுக்கமுடியாது. நினைவு கூர்வதற்கானதனிநபர் உரிமையையும், கூட்டுரிமையையும்,பல்வகைமையையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.நிலைமாறுகாலநீதியின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டுரிமைகளில் அதுவுமொன்று.
ஆயின், பொதுஏற்பாட்டுக்குழுஎங்கேதேவை? நினைவு கூர்தலில் எங்கேஆகக்கூடியபொதுத் தன்மை உண்டோ அங்கேதேவை. நினைவு கூர்தல் தொடர்பில்ஒருவிடயத்தில் ஆகக்கூடிய பொதுத்தன்மை உண்டு. அதுஎன்னவெனில் இனப்படுகொலையைநினைவு கூர்வதுதான். தமதுதமிழ் இன அடையாளத்திற்காகக் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதுதான். அந்தஅடையாளத்திற்காகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களைநினைவு கூர்வதுதான். இதன்படி அம்பாறைமாவட்டத்தில் இங்கினியாகல சீனித்தொழிற்சாலையில் கொத்தாகக் கொல்லப்பட்டதமிழ் மக்களிலிருந்துதொடங்கிமுள்ளிவாய்க்காலில் மே 18 வரைகொத்துக் கொத்தாகவும் உதிரியாகவும் கொல்லப்பட்டவர்களைநினைவு கூர்வதுஎன்பதுஒப்பீட்டளவில் அதிகபட்சம் பொதுத்தன்மை வாய்ந்தது. அதை ஒரு பொது ஏற்பாட்டுக்குழு பொறுப்பேற்பதேஅதிகம் பொருத்தமானது.
நினைவு கூர்தலில்ஆகக் கூடியபட்சம் பொதுத்தன்மைவாய்ந்தஒருபெருந்திரள் நிகழ்வுஅதுதான். ஈழத்தமிழர்கள் மத்தியில் ஆகப்பெரியபெருந்திரள் அரசியல் நிகழ்வாகஅதுஇருக்கும். ஆகக்கூடியபட்சம் உணர்ச்சிகரமானஒருநிகழ்வாகவும் அதுஇருக்கும். எனவேஅந்நிகழ்வில் உருத்திரளும் கூட்டுத்துக்கத்தைவாக்குகளாகமாற்றகட்சிகள் முயற்சிக்கும்;. அதைத்தடுப்பதற்கும் ஒருபொதுஏற்பாட்டுக்குழுதேவை. அதாவது இனப்படுகொலையைநினைவு கூர்வதற்கானஒருபொதுஏற்பாட்டுக்குழு.
அக்குழுவில் சமூகத்தின் சகலதரப்பும் பங்காளிகளாக்கப்படவேண்டும்.பெருந்தமிழ்ப் பரப்பிற்கும்அதுவிஸ்த்தரிக்கப்படவேண்டும். அதன் மூலமேஅதைஆகப்பெரியபெருந்திரள் நிகழ்வாகஒழுங்குபடுத்தலாம். அவ்வாறுசமூகத்தின் சகலதரப்பினரும் பங்கெடுக்கும் போதுஅதில் அரசியற்கட்சிகளும் மக்கள்பிரதிநிதிகளும் உள்ளடங்குவர். அதுஅவசியம்.மக்கள் ஆணையைபெற்றபிரதிநிதிகள் அதில் பங்கேற்பதன் மூலம் அதற்குரியஅரசியல் அந்தஸ்துஉயரும். அதேசமயம் மக்கள் பிரதிநிதிகள் கூட்டுத்துக்கத்தைகொத்துவாக்குகளாகமடைமாற்றுவதைஎப்படித் தடுப்பது? தடுக்கலாம். அதற்குநினைவு கூர்தல் என்றால் என்னஎன்பதுதொடர்பில் பொதுக்குழுஒருபொதுஉடன்பாட்டிற்குவரவேண்டும். அதன்படிபின்வரும் விடயங்களில் ஒருபொதுஉடன்பாடுஎட்டப்படவேண்டும்.
1. நினைவு கூர்தல் எனப்படுவது ஓர் அரசியல் நிகழ்வு
2. அது முடிவடையாத ஒருபோராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒருபகுதி. அதாவது இனப்படுகொலைக்கு எதிரானநீதியைப் பெறுவதற்கான ஒருபோராட்டத்தின் பிரிக்கப்படவியலாதஒருபகுதி.
3. அதைமுடிவுறாதஒருபோராட்டத்தின் ஒருபகுதியாகஏற்றுக்கொண்டால்தான் கூட்டுத்துக்கத்தை கூட்டுக் கோபமாகமாற்றலாம்.
4. அவ்வாறு கூட்டுத்துக்கம் ஒரு கூட்டுஆக்கசக்தியாகமாற்றப்படும் போதுஅதுஒருகுணமாக்கல் செய்முறையாகவும் அமையும். அதாவதுஅதுஒரு கூட்டுக்குணமாக்கல் செய்முறை. ஒரு கூட்டுச் சிகிச்சை.
5. தாயகத்திலும், டயஸ்பொறாவிலும் நினைவு கூர்தலைஒரேமையத்திலிருந்துதிட்டமிட்டால் அதுமிகவும் உன்னதமானது. தமிழகத்தையும் உள்ளடக்கிபெருந்தமிழ்ப் பரப்புமுழுவதுக்குமான ஒருநினைவு கூர்தலாக அதை ஒழுங்கமைத்தால் 2009 மேக்குப் பின் ஈழத் தமிழர்கள் பெற்றமிகப்பெரியஅரசியல் வெற்றியாக அது அமையும். அதுதமிழ் மக்களின் பலத்தைக் கூட்டும். தாயகத்தைமையமாகக் கொண்டேஅதுஒழுங்குபடுத்தப்படவேண்டும். மாறாக டயஸ்பொறாவிலிருந்து ‘ரிமோற் கொன்ரோல்’ செய்யப்படுவதாக இருக்கக்கூடாது.
6. இனப்படுகொலைஎனப்படுவது ஓர் இனத்தின் இருப்பை நீர்த்துப்போகச் செய்துஅந்த இனத்தைஅழிப்பது. எனவே இனப்படுகொலைக்குஎதிரானநீதியை பெறுவதுஎன்றால் ஆகக்கூடியபட்சம் ஓர் இனமாகதிரள வேண்டும். கட்சிகளால் அமைப்புக்களால் சிதறடிக்கப்படாத ஓர் ஆகப்பெரிய திரளாக மேலெழ வேண்டும். அதாவது அது ஒரு பெருந்திரள் நிகழ்வு. கட்சி நிகழ்வு அல்ல. அதுஒரு கூட்டுநிகழ்வுஎன்பதால் அங்கேகட்சிவேறுபாடுகளுக்கோகட்சிமுதன்மைகளுக்கோ இடமில்லை.
இப்படியொருவிளக்கம் ஒரு பொது உடன்படிக்கை ஏற்படுமிடத்து கடந்தபத்தாண்டுகளாக பல்வேறு நினைவு கூர்தல்களில் மேலெழுந்துவரும் குழப்பங்களுக்கும், பூசல்களுக்கும் இடமிருக்காது. மேற்படி உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளும், அமைப்புக்களும் நபர்களும் ஒரு பொதுஏற்பாட்டுக் குழுவைக் கட்டியெழுப்பினால் அதுஎல்லாநினைவு கூர்தல்களையும் ஓர் ஒழுங்கிற்குள் கொண்டுவந்துவிடும். இனப்படுகொலைக்கு எதிரானநீதியைப் பெறுவதற்கான போராட்டத்தையும் வேகப்படுத்தும்.அதுமட்டுமல்ல இறந்தவர்களின் பெயராலும் ஒற்றுமைப்படமுடியாத ஓர் இழி நிலைக்கு அது முடிவுகட்டும்.