இந்தியாவில் தொடருந்துகளில் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தும், கேலி செய்யும் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடருந்துகளில் பயணம் செய்யக்கூடிய பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தும், கேலி செய்யும் குற்றவாளிகளுக்கு, ஏற்கனவே அதிகபட்சமாக ஓரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தொடருந்துகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தண்டனை காலத்தை 3 ஆண்டுகளாக உயர்த்தும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென தொடருந்துப் பாதுகாப்புபடை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தொடருந்து பாதுகாப்புபடையின் சிரேஸ்டஅதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
தொடருந்துகளில் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்கிறவர்கள் மற்றும் பெண்களிடம் கேலி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடருந்து காவற்துறையின் உதவியை நாட வேண்டி உள்ளது. இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது.அதனால் இனிவரும் காலங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடருந்து காவற்துறையின் உதவி இன்றி விரைவாக நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கான தண்டனை காலத்தை உயர்த்தவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மேலும் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்கிறவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை.500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாவாக உயர்த்தவும் வலியுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.