பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் உதவியுடன் தன்னைக் கொல்வதற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழிகளினூடாக இதனை ஆராய்ந்து பார்த்ததில் இத் தகவல் உண்மையானது என்று தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் அதன் பின்னர் தனக்கு வழங்கப்பட்ட முழுமையான பாதுகாப்பு அணியை மீளப்பெறுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேனவிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது பாதுகாப்பு பாதியாக குறைக்கப்பட்டு விட்டதாகவும் கூறியதாகவும் பார்த்துக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்த போதும் பின்னர் அவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் இது நடந்து ஒன்றரை மாதங்களாகிவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலையாகும் போது தன் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் பாதாள உலகக் குழுத் தலைவரின் இந்த முயற்சியை அறிந்து கொண்டு நான் மேலதிக முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தனக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைமா அதிபருக்கு கோத்தபாய ராஜபக்ஸ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.