குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் உள்ளீட்ட மூன்று பீடங்கள் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ளன. அங்கு இரண்டாவது புத்தர் சிலை ஒன்று நிறுவப்படும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறும் மாணவர்கள் கோரியிருந்தமை தொடர்பில் குளோபல் தமிழ் செய்திகள் செய்தி ஒன்றினை வெளியட்டிருந்தது.
அனைத்து மத தலங்களுக்கான ஆன்மீக வழிபாட்டிற்கான பகுதியில் பௌத்த வழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலேயே இன்றைய தினம் பிரதிஸ்டை நிகழ்வு இடம்பெற்றதாகவும் பல்கலைக்கழக திட்ட வரைபடத்திற்கு அமைய அங்கு அனைத்து மதங்களுக்கான வழிபாட்டிடங்களும் அங்கு அமைய உள்ளதாகவும் பொறியல் பீட பீடாதிபதி அ. அற்புதராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்கலைக்கழக சூழலில் மத முரண்பாடுகளற்ற – நல்லிணக்கமான சூழலை ஏற்படுத்துவதே பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்று தெரிவித்த அவர், இந்த விடயத்தில் தமிழ், சிங்கள மாணவர்களும் முன்னுதாரணமாகச் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார். எவ்வாறெனினும் பல்கலைக்கழகத்தின் திட்ட வரைபடத்திற்கு அமைய அபிவிருத்தி மற்றும் கட்டமைப்பு மேம்பாடுகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறியியல் பீடத்தை இலங்கையின் முன்னுதாரணமான பீடமாக முன்னேற்றும் நடவடிக்கைகளில் பீட சமூகம் பெரும் சிரத்தையுடன் பயணிப்பதாக குறிப்பிட்ட அவர், தற்போது வெளியேறும் மாணவர்கள் மிகுந்த திறமை வெளிப்பாடுகளையும் சாதனைகளையும் நிகழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, அனைத்து மத ஆன்மீக வழிபாட்டிற்கான பகுதியில் இந்துமத ஆலயம் மற்றும் கிறீஸ்தவ ஆலயம் என்பவற்றுக்கான பிரதிஸ்டை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக கூறினார். வளாகத்தில் பிள்ளையார் சிலை ஒன்றை மாணவர்கள் பிரதிஷ்டை செய்தபோது, ஆகம முறைப்படி அவற்றை பிரதிஷ்டை செய்வதற்காகவே தடுத்து நிறுத்தியதாகவும் இந்துமத நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இவ்வாறு செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஒரு மாத காலப் பகுதிக்குள் அனை்தது மதங்களுக்கான ஆன்மீக வழிபாட்டிடத்தின் பணிகளும் சீருக்கு வந்துவிடும் என்றும் கிளிநொச்சி பொறியியல் பீடத்தின் பீடாதிபதி அ. அற்புதராஜா மேலும் தெரிவித்துள்ளார்.