கடனை திருப்பிச் செலுத்தும் தனது முயற்சிகளுக்கு உதவி செய்யாமல், அமுலாக்கத்துறை எதிர்த்து வந்ததாக மும்பை நீதிமன்றில் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். புதிதாக கொண்டுவரப்பட்ட ‘தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ், விஜய் மல்லையாவை தலை மறைவு குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, மும்பை நீதிமன்றில் அமுலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அதற்கு தனது சட்டத்தரணி மூலமாக நேற்றையதினம் பதில் அளித்த போதே விஜய் மல்லையா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, கடனை திருப்பிச் செலுத்த தான் தொடர்ந்து முயன்று வருவதாகவும், ஆனால், அந்த முயற்சிகளுக்கு உதவி செய்யாமல், அமுலாக்கத்துறை எதிர்த்து வந்ததாகவும், பொது மற்றும் தேசநலனுக்கு எதிராக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் பிரித்தானிய நீதிமன்றில், தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு விசாரணைக்கு தான் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்த அவர் இந்தியாவுக்கு வர தான் மறுப்பதாக கூறுவது சரியல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அடுத்தகட்ட விசாரணையை, 28-ந் திகதிக்கு நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி ஒத்தி வைத்துள்ளார்.