ஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச் சபையின் அமர்வுகளில் பங்குபற்றுவதற்காக, ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்குக்குச் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொது விவாதம் ஆரம்பிக்கும் முதலாவது நாளான இன்றே (25.09.18), தனது உரையை ஆற்றவுள்ளார்.
ஜனாதிபதிக்கான நேரம், பிற்பகல் அமர்விலேயே வழங்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க நேரப்படி, இன்று மாலை 4.30 மணியளவிலேயே அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, இலங்கை நேரப்படி, நாளை (26) அதிகாலை 2 மணியளவிலேயே, ஜனாதிபதி உரையாற்றுவார்.
இலங்கைப் படையினர் மீது காணப்படும் போர்க் குற்றச்சாட்டுகளை இல்லாது செய்யும் வகையில், ஐ.நாவில் தனது உரை அமையுமென, ஜனாதிபதி ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், இன்றைய உரையில், படையினருக்குப் பொது மன்னிப்பு வழங்குவது குறித்து, ஜனாதிபதி பரிந்துரைப்பாரா என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது.
குறிப்பாக, ஜனாதிபதியுடனான இந்த பயணத்தில் கலந்துகொண்டுள்ள அமைச்சர்களில், பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் இருவரும், போரில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர் என்று கருதப்படுகிறது. அவர்களில் அமைச்சர் சம்பிக்க, படையினருக்கும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குவது என்ற தனது பரிந்துரையை, பகிரங்கமாக ஏற்கெனவே வெளிப்படுத்தியிருந்தார்.
எனவே, ஜனாதிபதியின் உரையிலும், படையினருக்குப் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஆராயப்படுமெனக் கருதப்படுகிறது. ஆனால், ஜனாதிபதியின் திட்டத்தில், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் உள்ளடங்குவரா என்பது, தெளிவானதாகக் காணப்படவில்லை என, அரசாங்கத்தின் சில தரப்புகள் தெரிவித்திருந்தன.
இன்னும் சில தரப்பினரின் கருத்துப்படி, பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான திட்டமே, ஜனாதிபதியின் திட்டமாக இருக்கின்ற போதிலும், இம்முறை பொதுச் சபை விவாதத்தில், அதுகுறித்து உரையாற்ற வேண்டுமா என்பது குறித்து, ஜனாதிபதி மீளவும் சிந்தித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
அதற்கு மாறாக, வடக்குக்கும் தெற்குக்கும் இடையில், நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதையே, ஜனாதிபதி முக்கியமாக வலியுறுத்துவார் என, அத்தரப்புகள் தெரிவித்தன.
குறிப்பாக, அனைத்துத் தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்குதல் என்ற, அமைச்சர் சம்பிக்கவின் திட்டத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தலைமைகள், தங்களுடைய கடுமையான எதிர்ப்பை ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ள நிலையில், ஏற்கெனவே எதிர்க்கப்படும் திட்டத்தை முன்வைக்க, ஜனாதிபதி விரும்பமாட்டார் என்றும் கருதப்படுகிறது.
அத்தோடு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஐ.அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்டு, 2015ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இணை அனுசரணை வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின்படி, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து, இலங்கை விசாரணை செய்யுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, பொது மன்னிப்பு வழங்குதலென்பது, அத்தீர்மானத்துக்கு எதிரானதாக அமையுமென்ற விமர்சனமும் காணப்படுகிறது.
இம்முறை பொது விவாதத்தின் கருப்பொருளாக, “அனைத்து மக்களுக்கும் சம்பந்தப்பட்டதாக, ஐக்கிய நாடுகளை மாற்றுதல்: சமாதானமாக, சமத்துவமான, நிலைத்திருக்கக்கூடிய சமுதாயங்களுக்காக, பூகோள தலைமைத்துவமும் பகிரப்பட்ட பொறுப்புகளும்” என்பது அமைந்துள்ளது.