Home இலங்கை கருணாவை புனிதராக்கிவிட்டு பிரபாகரனை பாசிஸ்டாக்கும் லொஜிக்கை இன்னும் புரிந்துக்கொள்ள முடியவில்லை!

கருணாவை புனிதராக்கிவிட்டு பிரபாகரனை பாசிஸ்டாக்கும் லொஜிக்கை இன்னும் புரிந்துக்கொள்ள முடியவில்லை!

by admin

கவிஞர் மாலதி மைத்ரி – நேர்காணல்: குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

மாபலி விருந்து அழைப்பு!

ஆன்றோரே சான்றோரே
பேரரறிஞர்களே மூதறிஞர்களே
கவிஞர்களே கலைஞர்களே
அரசு ஊழியர்களே
என் உயிரினும் உயிரான தமிழர்களே
நாம் சுவாசித்தது ஒரே காற்று
நாம் பேசியது ஒரே மொழி
நாம் நடத்தியது ஒரே பேரம்
நாம் விதித்தது ஒரே விலை
நாம் விற்றது ஒரே இனம்
காட்டிக்கொடுக்க நீண்டதும்
நம் ஒரே விரல்
நாம் செய்ததும் ஒரே துரோகம்
இம்மாபெரும் வரலாற்றை
நாம் சாதித்த ஓராண்டின் நிறைவைக்
கொண்டாடும்
விருந்துக்கு அழைக்கிறேன்
உலகே தமிழ் மண்ணில் திரளட்டும்
விரோதி வருடம்
சித்திரை ஐந்தாம் நாள்
வங்கக் கடல் தீவில்
சிங்கப் படைகள்
சில லட்சம் மக்களைக் கொன்றொழித்து
சீர்மிகு வரலாறு படைத்த
மாபலி நாளின்
மாண்பினைப் போற்றும் வகையில்
இச்சித்திரை மாதம்
பௌர்ணமி தினத்தில்

மனிதகுலமே கண்டிராத வகையில்
மாபெரும் விருந்து நடக்கிறது
அனைவரும் கலந்துகொண்டு
விருந்தினைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்
அறுக்கப்பட்ட மென்முலைகள்போன்ற
இட்லியுடன் பிள்ளைக்கறி பிசைந்த
செவ்வரிசிச் சோறு
மதுவருந்தும் கவிஞர்களுக்கு மட்டும்
நுரை பொங்கும் செங்குருதியுடன்
மூளை வறுவல் வழங்கப்படும்
இதிலுள்ளவை தவிர்த்து
சிறப்புணவு தேவையெனில்
மூன்று தினங்களுக்கு முன்
எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தால்
தீவிலிருந்து
தனி விமானத்தில்
தருவித்துத் தர ஏதுவாக இருக்கும்
உலகச் சமூகமே வியந்து நிற்க
உலகத் தமிழர்கள் ஒன்றாய் நின்று
இப்பலி விருந்தைச் சிறப்பிக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன்.

இவ்விருந்தை வழங்குபவர்கள்

ஹைடு அண்ட் சீக் வேர்ல்டு விஷன்
ஹனி டியூ அண்ட் ஸ்பிரிங் பிரிவரிஸ்,
ஆன்ட்டி வார் அண்ட் பீஸ் ஹன்டர்ஸ்,
வேர்ல்டு நைட்ரோ கெமிக்கல்ஸ்,
இன்டர்நேஷனல் வார் கிரிமினல்ஸ் அசோஸியேஷன்.

– மாலதி மைத்ரி

குறிப்பு: தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே அயல் நாட்டு நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இதைப் பிழையாகக் கருதி தமிழ்ப் பற்றாளர்கள் விருந்துக்கு வராமல் இருந்துவிடக் கூடாது. இது எங்கள் அன்புக் கட்டளை!

இந்தியாவின் புதுவை மாநிலத்தை சேர்ந்த மாலதி மைத்ரி 2010இல் எழுதியது மேலுள்ள கவிதை. கவிஞர், எழுத்தாளர் மாலதி மைத்ரியின் கவிதைகள் பெண் குரலாக மாத்திரமின்றி ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் விளிம்புநிலை சனங்களுக்காகவும் ஒலிப்பவை. ஈழம் சார்ந்தும் எழுத்தின் வழியாகவும் செயற்பாடுகளின் வழியாகவும் பங்களிப்பவர். மனித உரிமை அரசியல் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுபவர். ‘அணங்கு’ எனும் பெண்ணிய இலக்கிய இதழினை நடத்திவரும் இவர் அணங்கு பெண்ணியப் பதிப்பகம் வழி பெண் எழுத்துக்களை பதிப்பித்து வருகிறார். சங்கராபரணி (2001), நீரின்றி அமையாது உலகு (2003), நீலி (2005) என்பவை இவரது கவிதைத் தொகுதிகள். விடுதலையை எழுதுதல் (2004), நம் தந்தையரைக் கொல்வதெப்படி (2008) எனது மதுக்குடுவை – 2011(கவிதைகள்) வெட்டவெளி சிறை -2014(கட்டுரைகள்( முள்கம்பிகளால் கூடு பின்னும் பறவை – 2017 (கவிதைகள்) என்பவை இவரது கட்டுரை நூல்கள். இலக்கிய சந்திப்பு நிகழ்வொன்றுக்காக ஈழத்தின் கிழக்கிற்கு வந்திருந்த மாலதி மைத்ரி வடக்கு பகுதிக்கும் வந்திருந்தார். இன்றைய ஈழச் சூழல், இலக்கிய நிலவரங்கள் தொடர்பில் அவருடன் நி்கழ்த்திய நேர்காணல் இது.

முதன் முதலாக ஈழத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளீர்களா? எத்தகைய அனுபவத்தை ஈழப் பயணம் தந்திருக்கிறது?

முதல் பயணமென்றாலும் புதிதாகவோ அந்நியமாகவோ தோன்றவில்லை. ஈழ மக்களின் வாழ்வியல் முறை உணவு உடை கலாச்சாரப் பழக்க வழக்கங்களில் சிற்சில வேறுபாடுகளிருந்தாலும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நிற்கும் உணர்வையளித்தன. டெல்லியும் எங்களுக்கு அந்நிய தேசம் மாதிரிதானே கொழும்புக்குள் நிற்கும்போது அதேயுணர்வென சொல்ல முடியாது ஒரு கண்காணிப்பின் பொறிக்குள் நிற்கும் பதட்டம் உள்ளுக்குள் கசிந்தபடியிருந்தது. ஈழத்தமிழர்கள் குரலில் பேச்சில் நடத்தையில் அவதானிப்பில் அச்சத்தின் அதிர்வுகளை கடத்திக்கொண்டிருந்தார்கள்.

ஊடகங்கள் வழி எழுத்துக்களின் வழி அறிந்த ஈழமும் நேரில் பார்த்த நிலைமைகளும் எப்படி உள்ளன?

பிள்ளைப் பிராயத்தில் வானொலிப் பெட்டி வழி வித்தியாசமான தமிழ் பேசும் மக்கள் சிலோன்காரர்களென்று அறிமுகமாகியிருந்தார்கள். பிறகு பள்ளிப் பருவத்தில் தமது விடுதலைக்காக போராடும் தமிழர்கள் வாழும் தேசமென்று செய்தித்தாள்களின் வழி விளங்கிக்கொண்டேன். 83 கருப்பு ஜீலை பள்ளி மாணவர்களின் போராட்டத்தில் கலந்துக்கொண்டதன் மூலமும் ஈழம் என்ற தேசத்தின் விடுதலையின் நியாயங்களை தெருமுனைக் கூட்டங்களிலும் செவியுற்றேன்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இயக்கங்களும் தமிழகத்தில் தங்கள் பயிற்சி முகாம்களை அமைத்திருந்திருந்ததால் அவர்களின் வாக்குமூலங்களையும் புலம்பெயர்ந்தவர்களின் தரப்பு கதைகளையும் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். இக்காலப்பகுதியிலேயே 88லிருந்து போராளிகள் இயக்கவாதிகள் படைப்பாளிகளின் போர் இலக்கியங்கள் வழி ஈழம் என்னிடம் வந்துச் சேர்ந்திருக்கிறது. ஈழ விடுதலையை ஆதரித்தும் எதிர்த்தும் எழுதப்பட்ட பல ஆயிரம் பக்கங்களைப் படித்திருக்கிறேன். படைப்பாளிகள் கலைஞர்கள் செயற்பாட்டாளர்களைத் திரட்டி சுகிர்தராணி போன்ற சகபெண் கவிஞர்களுடன் ஒருங்கிணைத்து 2009 பிப்ரவரியில் டெல்லி ஈழத்தில் தமிழினப்படுகொலையை நிறுத்தக் கோரி போராடினோம். இப்போராட்டத்தில் கலந்துக் கொண்ட பல தமிழகப் படைப்பாளிகள் தமிழினப்படுகொலை நடந்து முடிந்தபின் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு சிங்கள பேரினவாதிகளின் ஆதரவாளர்களாக மாறிய அவலமும் நடந்தது.

தமிழனப்படுகொலை நடந்து முடிந்து ஒரு தசாப்தம் முடியப் போகிறது. புதிய சாலைகள் புதிய வணிக வளாகங்கள் பொழுதுபோக்கு தளங்கள் குப்பைகளற்ற நகரக்கட்டமைப்பு போக்குவரத்து விதிகளை மீறாத வாகன இயக்கமென அரசகட்டுப்பாட்டு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டு இயல்பாக இயங்கும் பாவனையை பூண்டிருக்கின்றன. அரச விதிகளை மீறாத தமிழர் மனம் பேரினவாத அரசியல் விதிகளையும் மீறாமல் நாளடைவில் பழகிவிடும்.

தமிழர் நலன் அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கு சாலை மின்சாரம் குடிநீர் கொசு ஒழிப்பு பிரச்சனைகளை பேசலாம். நிலவுரிமை, காணிகள் மீட்பு, மீள் குடியேற்றம், பள்ளிகள், கல்விமுறை, சம வேலை வாய்ப்புகளைக் கூட அரசியல்வாதிகளால் பேச முடியவில்லை. பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையிலிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் கடத்தப்பட்டவர்கள் காணாமல் போனவர்களை மீட்கவும் கோரி கண்ணீருடன் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் வீதியில் புகைப்படங்களை ஏந்தியபடி தனித்து நின்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இறுதிக்கட்ட போர் நடந்து முடிந்த நிலத்தில் குண்டுகள் விழுந்து சிதிலமான வீடுகள் மருத்துவமனைகள் பள்ளிகள் கல்லறைகளில்லை. முறிந்த பனைகளோ எரிந்த மரங்களோயில்லை. நாய் நரிகள் காக்கைக் குருவிகள் அரவமற்று நெடும் பற்றைகள் வளர்ந்து இனப்படுகொலையின் எந்த தடமுமின்றி மயான அமைதி அப்பிக்கிடக்கும் நிலத்தில் எங்கோ ஓரிரு வீடுகள் நாடோடிகளின் தரிப்பிடம் போல் அமைந்திருக்கின்றன. உடலில் இனப்படுகொலையின் வடுக்களையும் நெஞ்சில் ஆறாத ரணங்களையும் சுமக்கும் ஈழ மக்களையும் பேரழிவின் சுவடுகள் தூர்க்கப்பட்ட மண்ணையும் கண்டேன். எங்கோ ஒரு பள்ளி கட்டிடமிருக்கிறது.

இறுதியுத்தம் நடந்த வட கிழக்கு தமிழர் பூமியில் போரின் அடையாளம் முற்றாக துடைத்தழிக்கப்பட்டு உழுது மண்ணோடு மண்ணாக சமப்படுத்தப்பட்டுவிட்டன. மக்களே அற்ற ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தற்போது யாருக்கு சொந்தம்? இதை உழுதது யார்? யார் பயிரிடப் போகிறார்கள்? யார் அறுக்க போகிறார்கள்? கேள்விகள் துரத்துகின்றன.

நீங்கள் கலந்து கொண்ட ஊடறு இலக்கிய சந்திப்பில் என்னென்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டன?

ஊடறு முன்னெடுத்த பெண்கள் சந்திப்பில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் போராளிகள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள், பெண்கள் சிறார்கள் மீதான பாலியல் வன்முறைகள், சாதியப் படுகொலைகள், ஆண் மொழி கட்டுடைப்பு, சடங்கு சமய வழக்கங்களின் ஒடுக்குமுறை, குடியுரிமை மனிதவுரிமைச் சட்டங்களின் நடைமுறைச் சிக்கல்கள், கலை இலக்கியத்தில் பாலரசியலென பல தலைப்பில் உரைகள் நிகழ்த்தப்பட்டன வாதிக்கப்பட்டன. சூர்யா பெண்கள் குழு அரங்கேற்றிய “மட்டுநகர் கண்ணகி” நாடகம் மூன்றுத் தலைமுறைகளின் போரின் வலிகளையும் துயரையும் கண் முன்னே நிறுத்தி பலரை அழ வைத்துவிட்டது.

ஈழத்தில் மக்களின் வாழ்வும் மக்களின் மனநிலைகளும் எவ்வாறுள்ளன?

நகரங்களில் வாழும் தமிழர்களின் பொருளாதாரம் சார்ந்த வாழ்வாதாரம் நிலைப்பட்டிருந்தாலும் இந்நிலை இப்படியே நீடிக்குமா என்ற பயத்தின் கருவண்டு அவர்களின் இதயத்தை குடைந்துக் கொண்டிருக்கிறது. இணக்க அரசியல் இப்படியே தொடருமென்ற எந்த உத்தரவாதமுமில்லை. வணிக நிறுவனங்கள் வீடுகள் சிங்களர்களால் கொழும்பில் மூன்றுமுறை கொளுத்தப்பட்ட சூறையாடப்பட்ட கதைகளையும் கேட்டேன்.

யுத்தத்தால் புலம்பெயர்ந்து காணிகளை இழந்த மக்கள் தங்கள் மீள் குடியேற்றத்திற்காகக் காணிகளை மீட்கும் திசையறியாதுக் காத்திருக்கிறார்கள். வேலை வாய்ப்பின்மை, அதிகபடியான போதை பழக்கம், களவு, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுடன் போரின் வடுக்கள் காயங்களுடன் பாரிய அழுத்தங்கள் அவர்களை நடைப்பிணங்களாக்கி வைத்திருக்கின்றன. இயக்கங்கள் ஒழிந்தால் போதும் நம் பிள்ளைகள் பிழைக்குமென்று நினைத்தோம் இன்று போதை பழக்கத்திற்கு அடிமையாகி இளைஞர்கள் அழிவதுமட்டுமல்ல வழிபறி பாலியல் வன்முறையும் குற்றங்களும் பெருகிவிட்டன நடமாட அச்சமாக இருக்கு. இயக்கம் இருந்திருந்தால் பொடியன்கள் கெட்டுச் சீரழிந்துப் போயிருக்க மாட்டார்கள் என்பதையும் கேட்டேன்.

அதுபோல் போராளிகளும் தங்கள் தங்கள் இயக்க அடையாளங்கள் சார்ந்து சரி தவறு வன்முறைகளையும் குற்றச்சாட்டாக முன்வைத்தார்கள். ஈழ மக்களின் ஈழ அறிவுஜீவிகளின் மனநிலை வேறாகவும் இலங்கை அறிவுஜீவிகளின் மனநிலை இவர்களுக்கு எதிராகவும் இருப்பதை உரையாடலில் அவதானித்தேன்.

வன்னி கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் இயங்கிய 70 சதவீத பள்ளிகள் தற்போதில்லையென தோழர் ஒருவர் சொன்னார். இப்பள்ளிகளில் படித்த மாணவர்களின் மொத்த குடும்பமும் கொல்லப்பட்ட பிறகு பள்ளிக்கு மாணவர்கள் எப்படி கிடைப்பார்கள். எங்கோ தொலைத்தூரத்தில் எழும்பி நிற்கும் ஒன்றிரண்டு வாகன வசதியற்ற அப்பள்ளிகளுக்கு மாணவர்கள் பல மைல்கள் நடந்துவந்து படிப்பதும் படிக்காமல் போவதும் ஒரு பிரச்சனையா? தமிழின விடுதலை குரலையே பாசிசமென வரையறுத்த அரச முகவர்கள் போற்றும் ஒற்றை தேசத்தை சம வாய்ப்புகளுடன் சமவுரிமைகளுடன் கட்டியெழுப்பிய நல்லிணக்க அரசிடம் எங்கள் வீடுகள் எங்கே, எங்கள் மக்கள் எங்கே, எங்கள் மாணவர்கள் எங்கே, எங்கள் பள்ளிகள் எங்கே, எங்கள் ஆசிரியர்கள் எங்கே என்று கேட்பதும் கொல்லப்பட்டவர்களுக்காக நீதி கேட்பதும் இலங்கை அறிவுஜீவிகளுக்கு தமிழ் பாசிசமல்லவா? இலங்கையின் பிரஜைகளென்று அடையாளப்படுத்திக்கொள்ளும் தமிழர்களின் குரல்களும் அச்சத்தால் தடித்து மௌனித்து உறைந்ததையும் கண்டேன்.

பல்வேறு இயக்கங்களின் உட்பகைகள், அழித்தொழிப்புகள் சரி தவறுகள், வன்முறைக்கு வெளியே தமிழர்களை எந்த அறமுமற்று கொன்று குவிக்க உனக்கு என்ன அதிகாரமிருக்கென்று சிங்களப் பேரினவாத அரசை நோக்கி கேட்க முடியாதவர்கள் புலிகள் பாசிஸ்ட்டுகளென்று பெரிய கோட்டுக்கு பக்கத்தில் சிறிய கோட்டை வரைந்து பெரிய கோட்டை அழித்துவிட்டு பார் இதுதான் ஒரே கோடு பெரிய கோடென நிறுவ முயலுகிறார்கள். இனப்படுகொலையை யுத்த குற்றம் என்பதும் போர்க்குற்றத்தை இனப்படுகொலையென திரிக்க முயல்கிறார்களென்றும் மனசாட்சியே இல்லாமல் பேசுகிறார்கள். சிங்கள மக்களே தமிழர்கள் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலைதானென சாட்சியமளித்து உயிருக்கு பயந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் செய்திகளும் கதைகளும் தமிழகத்துக்கு மொழிபெயர்த்து கொண்டுவரப் படவேண்டும்.

ஈழ இலக்கியத்தின் இன்றைய போக்குகள் குறித்து உங்கள் கருத்து?

ஈழத்திலே அல்லது புலம்பெயர்ந்தவர்களாலோ எழுதப்படும் போர் இலக்கியங்களை இரண்டு வகைமைக்குள் அடக்கிவிடலாம். அதற்கு பன்முக தளமிருக்கு என்று சப்பை வாதம் கட்டினாலும் ஈழ விடுதலையை சமவுரிமையை ஆதரிக்கும் எதிர்க்கும் இரண்டு முகங்கள் மட்டுமே அதற்குவுண்டு. ஈழ விடுதலைப் போராட்ட காலத்திலும் முடிவுக்கு வந்த பின்னும் கொடும் வாய்ப்பாக ஈழ விடுதலையை ஆதரிக்கும் படைப்புகள் குறைவாகவும் சிங்கள பேரினவாதத்துக்கு வெள்ளையடிக்கும் படைப்புகளும் புலிக் காய்ச்சல் கதைகளும் வற்றா ஊற்றென சுரந்துக் கொண்டிருக்கின்றன. இப்படிப் பெருக்கெடுக்கும் பொய்களின் வெள்ளத்தில் உண்மைகள் அடித்துச் செல்லப்படுகின்றன. ரஜானியின் முறிந்த பனையிலிருந்து வெற்றிச்செல்வியின் போராளியின் காதலி வரை ஈழத்தவர்களின் முக்கியமான குறிப்பிடத்தக்க படைப்புகளை படித்திருக்கிறேன். ஈழ விடுதலையை பேசும் எழுத்துக்களை புலி ஆதரவு இலக்கியமென குறுக்கி எதிர்த்தரப்பு அனைத்துப் படைப்புகளையும் நிராகரித்துவிடும் பாசிசம் இங்கு நிலவுகிறது. உதாரணமா ஆழியாள், பஹிமா ஜஹான் போன்ற இயக்கச் சார்ப்பற்ற பெண்களின் எழுத்துக்களைக் குறித்து பேசாமல் கடந்துவிடுகிறார்கள்.

தமிழன அடையாளமே பாசிசமென நிறுவ இவர்கள் வைக்கும் காரணம் 1. முஸ்லிம்கள் மீதான வன்முறை 2. ஆதிக்கச் சாதிய மனநிலை. முஸ்லிம்கள் மீதான வன்முறையை நிகழ்த்தியது கருணா தலைமையிலான புலிகள் அமைப்பு. அவ்வன்முறைகளுக்கு பிரபாகரனும் கருணாவும்தான் பொறுப்பு.

பேரினவாத அரச ஆதரவாளர்கள் தங்கள் கதைகளின் வழி புனித நீர் தெளித்து ஞானஸ்தானமளித்து கருணாவை புனிதராக்கிவிட்டு பிரபாகரனை பாசிஸ்டாக்கி சிலுவையில் அறையும் லொஜிக்கை எங்களால் இன்னும் புரிந்துக்கொள்ள முடியவில்லை. இலங்கையில் நிலவும் அனைத்து சமயங்களிலும் இனக்குழுவிலும் சாதியத் தீண்டாமை ஒடுக்குமுறை கலாச்சாரமிருக்கு. ஒரே வடிவத்தில் இல்லையென்றாலும் வேறுவேறு வடிவங்களில், பெண்ணொடுக்குமுறையுமிருக்கு. இஸ்லாமிய சமூகத்துக்குள் சாதி மாதிரியான தொழில் ரீதியான வர்க்கப் படிநிலையும் ஒடுக்குமுறையும் பெண்ணடிமைத்தனமுமிருக்கு, அதுபோல் தலித்துகளுக்குள்ளேயே உட்சாதி படிநிலையில் சாதிய ஒடுக்குமுறையும் பெண்ணடிமைத்தனமுமிருக்கு, இஸ்லாமிய மக்களும் தலித்துகளும் தங்கள் விடுதலைக்காகப் பேசுவது போராடுவது பாசிசமென்று ஒருவர் கூறினால் ஏற்றுக் கொள்ளும் ஒருவர்தான் தமிழர்கள் பாசிஸ்டுகள் விடுதலை கேட்க உரிமையில்லை என்பதையும் ஏற்றுக் கொள்ளலாம்.

புலி ஆதரவு எழுத்தாளர்கள் இந்துத்துவா ஆதரவுநிலைப்பாட்டையும் சைவ மனநிலையும் காவித் திரிகிறார்கள் என்று ஒரு மதிப்புமிக்க கேள்வியை வைக்கிறார்கள். உண்மையில் இது பொருட்படுத்தத்தக்க கேள்விதான். இவர்கள் எங்கு நின்று இதைக் கேட்கிறார்கள் என்று சற்று பார்ப்போம். ஜெயமோகன் இந்துத்துவாவின் கருத்தியல் பீரங்கி என்பதை யாரும் இங்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை அவரே அதை பெருமையாக கருதுபவர். புலிக்காய்ச்சல் படைப்பாளிகளின் தொங்கு சதைகளுக்கு ஜெயமோகன் ஆசான். அதே போல் இவர்களை அழைத்து மேடைகட்டும் தமிழக லஷ்மி மணிவண்ணன் மலேசிய வல்லினம், ம. நவீன் போன்றவர்களுக்கும் ஜெயமோகன் ஆசான். ஒரு மேடைக்கு ஜெயமோகனை அழைத்து காப்புக்கட்டி கும்பாபிஷேகம் நடத்திவிட்டு பிறகு புரட்சிகர மஞ்சள் தெளித்து தீட்டு கழித்து அடுத்த மேடைக்கு சர்வதேசவாதிகளான இந்துத்துவா எதிர்ப்பு பீரங்கிகளை அழைப்பார்கள். தமிழகத்தில் ஜெயமோகன் என்பது ஒரு ஜெயமோகன் அன்று. அது ஒரு இந்துப்பழமைவாத, இந்துத்துவா குலக்குழு வகையறா. இப்போது ஜெயமோகன் வகையறாக்களிடம் மகுடம் சூட்டிக்கொள்ளும் போட்டி மட்டுமே புலி ஆதரவு புலி எதிர்ப்பு ஆட்களிடம் நடக்கிறது. எல்லைக்கடந்த சர்வதேசவாத எலக்கியவாதிகள் காலச்சுவடு இந்துத்துவா அமைப்பென எதிர்ப்பார்கள். காலச்சுவடில் நீ எப்படி நூல் போடலாமென என்னிடம் கேள்வி வைப்பார்கள். ஆனால் அவர்கள் எழுதுவார்கள். காலச்சுவடு வெளியிட்ட ஈழ விடுதலை எதிர்ப்பு இலக்கியங்களை கொண்டாடுவார்கள். எல்லோரும் வட்ட வட்டமா தனித்தனியே இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறார்கள். எல்லா வட்டமும் ஒரு மைய வட்டத்தை வெட்டியே தங்கள் அதிகார வளையங்களை நிறுவிக்கொள்ள முயலகின்றன.

ஈழம் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் பாக்கெட்களை குறிவைக்கும் தமிழகத் திரைப்படங்கள் தமிழகப் பதிப்பகங்கள் படைப்பாளிகளின் வணிக அரசியல் போலவே ஈழ அரசியலின் தார்மீக அறத்தை புறம்தள்ளி சுயநலம் சார்ந்து தமிழக வாசகர்களைக் கவர்வதும் அதிக பிரதிகள் விற்பதும் விருது வாங்கி குவிப்பதும் பிரபலமாவதும்தான் இலங்கை தீபகற்பத்தைச் சார்ந்த பெரும்பாலானவர்களின் இலக்கிய அரசியலாக இருப்பது மன வருத்தத்தையளிக்கிறது.

நேர்காணல்: குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More