Home இலங்கை திலீபனின் கனவை மெய்ப்பிப்பதுவே அவருக்குச் செய்யும் மரியாதை! 

திலீபனின் கனவை மெய்ப்பிப்பதுவே அவருக்குச் செய்யும் மரியாதை! 

by admin

தீபச்செல்வன்….

தியாக தீபம் திலீபன் அவர்களின் 31ஆவது ஆண்டு நினைவு நாட்கள் தொடங்கியுள்ளன. இறுதிப் போர்காலத்தில் பிறந்த, எனது மாணவர்கள் சிலரிடம் திலீபன் அவர்களின் புகைப்படத்தைக் காண்பித்து, இவரைத் தெரியுமா என்று கேட்டேன். ”இவர் திலீபன் அண்ணா” என்று போட்டி போட்டுக் கொண்டு சொன்னார்கள்.  திலீபன் அவர்கள், ஈழத்தின் எந்த தலைமுறையாலும் மறக்க முடியாத, மறக்கக்கூடாத போராளி. திலீபன் அவர்களின் கனவு, ஈழத்தின் எந்த தலைமுறையாலும் மறக்க முடியாத, மறக்கக்கூடாத கனவு. அதனை  மெய்ப்பிக்கும் விதமாக இன்றைய ஈழமும் புலம்பெயர் தேசங்களும் அவரின் நினைவில் மூழ்கியுள்ளன.

தியாக தீபம் திலீபன்  அவர்களின் நினைவிடத்தில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவரது நினைவுநாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. 2009இற்கு முன்னரான காலத்தில் தியாகியின் நினைவு நாட்கள் என்றால் ஈழம் அவரது நினைவுகளால் மூழ்கியிருக்கும். கடுமையான போர், அலைச்சல், பட்டினி வாழ்வு பிய்ந்துபோன குடிசை.. எனினும் வீட்டின் முன்னால் திலீபன் அவர்களின் நினைவுப்படம் வைக்கப்பட்டு பூமாலை அணிவித்து தீபம் ஏற்றப்பட்டிருக்கும். ஈழத் தெருவெங்கும் திலீபனின் முகங்களால், சிவப்பு மஞ்சள் கொடிகளால் நிறைந்திருக்கும். 2009இற்குப் பின்னரான காலத்தில் தியாக தீபத்தின் நினைவுநாட்கள் புலம்பெயர் தேசங்களிலும் இணையங்களிலுமே அனுஷ்டிக்கப்படுவதுண்டு.

செய்திகளால், கட்டுரைகளால், கவிதைகளால், பாடல்களால் நினைவுகூரப்படும் தியாக தீபத்தின் நினைவுநாளை, அவர் எந்த நிலத்திற்காக, எந்த நிலத்தின் சனங்களுக்காக துளி நீரும் அருந்தால் 12 நாட்கள் நோன்பிருந்து, உயிர் துறந்தாரோ, அந்த நிலத்தில், அந்த நிலத்தின் சனங்களால் அவரது நினைவுநாளைக் கொண்டாட முடியாதிருந்தது. சிங்களப் பேரினவாத அரசும் அதன் படைகளும் தியாக தீபத்தின் நினைவுத் தூபியையும், அவர் உண்ணா நோன்பிருந்த இடத்தில் அமைக்கப்பட்ட நினைவுக் கல்லையும் சிதைத்து அழித்தது. ஆனாலும்  எதனாலும் அழிக்க முடியாத  திலீபனின்நினைவுகளையும் அவரது கனவையும் ஒருபோதும் அழித்துவிட முடியவில்லை.

இணையத்தில் தியாக தீபம் போன்றவர்களின் நினைவுநாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்ற போது, ஈழ விடுதலை மறுப்பாளர்களும் சிங்கள அரசின் கைக்கூலிகளும் அதனை இணையப் போராளிகளன் இயலாமை என கிண்டல் செய்தனர். பலம் மிக்க நவீன ஊடகமான இணையத்தில் நினைகூரப்பட்ட தியாக தீபத்தின் நினைவுநாட்களை, இப்போது ஈழ நிலத்தில் எமது மக்கள் அனுஷ்டிக்கத் தொடங்கியுள்ளனர். 2009 இனப்படுகொலைப் போரின் பின்னரான இன்றைய காலத்தில், நம்பிக்கையற்ற அரசியல் சூழல் நிலவும் இன்றைய காலத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவு கூர்வதும் அவரது கனவை நினைகூர்வதும் மிகவும் முக்கியத்துவமான ஒன்றாக உள்ளது.

இராசைய்யா பார்த்திபன் எனப்படும் லெப்டினன் கேணல் திலீபன் அவர்கள், நவம்பர் 27, 1963ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஊரெழுவில் பிறந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவராக இருந்த தியாக தீபம் திலீபன் அவர்கள் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டவர். அவர் கருத்தியல் ரீதியாக ஆழமான புரிதல் கொண்ட ஒரு போராளியாக இருந்தார். பால்நிலை மற்றும் சமூக சமத்துவக் கண்ணோட்டம், பிற்போக்குத்தனங்களை உடைக்கும் பார்வை கொண்ட திலீபன் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஜனநாயக முகமாகும். அவர் ஆற்றிய உரை ஈழ மக்களை இன்றும் நம்பிக்கையும் எழுச்சியையையும் கொள்ளச் செய்பவை.

 ஆயுதப்போராளியான அவர் அகிம்சையைக் கையில் எடுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உன்னதமான போக்கினை இவ் உலகிற்கு வெளிப்படுத்தினார். செப்டம்பர் 15, 1987. இந்திய அரசிற்கு எதிராக தனது உண்ணா நோன்புப் போரை ஆரம்பித்தார் தியாக தீபம் திலீபன் அவர்கள். அவர் வலியுறுத்திய ஐந்து அம்சக் கோரிக்கைகள் இன்றும் ஈழ நிலத்தின் கோிரக்கைகளாக இருக்கின்றன.

01. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
02. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
03. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
04. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
05. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
முதலிய ஐந்து கோரிக்கைகளை திலீபன் வலியுறுத்தினார்.

ஈழ இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தீர்வு எனக் கூறி, இலங்கை – இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு, 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய இராணுவத்தினர் அமைதிப் படை என்ற போர்வையில் ஈழத்திற்கு வந்தனர். ஆனால் சிங்கள அரசின் தமிழ் இன – நில அழிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முடுக்கி விடப்பட்டிருந்தன. இதற்கு எதிராகவே தியாக தீபம் உண்ணா நோன்பினை மேற்கொண்டார். ஈழ இனப்பிரச்சினையைத் தீரப்பதாகக் கூறிய இந்த அரசின் படைகளது பாதுகாப்புடன் தமிழ் இன நில அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவின் போலியான அகிம்சை முகத்தை தோலுரித்துக் காட்டினார் தியாகி திலீபன்.

திலீபன் முன்வைத்த, ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளாமல், சிங்கள அரசுக்கு துணை செய்தது, அதன் இன நில அழிப்புச் செயல்களுக்கு ஒத்தாசை புரிந்தது. தியாக தீபம் திலீபன் அவர்கள் உண்ணா நோன்பை  தொடங்கியபோது, ஒட்டு மொத்த ஈழமும் பசியிருந்தது. நல்ல முடிவு வரும், திலீபன் மீண்டு வருவார் என்று காத்திருந்தது. தன்னை உருக்கி உருக்கி தமிழர்களின் கோரிக்கையை வலுப்படுத்தினார் திலீபன். மெலிந்த தேகம், ஈர்க்கும் புன்னகை, புரட்சிக் குரல், இந்திய அரசின் துரோகத்தால்  ஈழ மண்ணில் சாய்ந்தது. உண்ணா நோன்பின் 12ஆவது நாள், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு ஈழ மண் பெற்றெடுத்த ஒப்பற்ற போராளி திலீபன் அவர்கள், தன்னுடைய 23ஆவது வயதில் வீர மரணம் எய்தினார்.

இன்றைய காலத்தில், திலீபன் அவர்களை நினைகூருகின்றபோது இரண்டு விடயங்களை வலியுறுத்த வேண்டியுள்ளது, அல்லது பின்பற்ற வேண்டியுள்ளது. ஒன்று, தன்னலமற்ற அரசியல் எமக்கு அவசியமானது. மற்றையது, திலீபனின் கனவை மெய்ப்பிப்பதுதான் அவருக்கு செய்யும் மரியாதை. அவரை நினைவுகூர்வதற்கு அர்த்தமானதாயிருக்கும். 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர், அதாவது ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட பின்னர், ஈழத் தமிழ் மக்கள் நம்பிக்கையற்ற, சூன்யமான அரசியல் சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். திலீபன் போன்ற போராளிகள் தன்னலமற்ற அரசியலால் ஈழப் போராட்டத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினர், எடுத்துரைத்தனர்.

அந்தப் போராட்டத்தை ஒரு அசியல் போராட்டமாக, ஒரு அரசியல் இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. திலீபன் போன்ற உன்னதமான போராளிகள் சுமந்த கனவை, எடுத்து வந்த ஆயுதத்தை தொடர்ந்து ஏந்திச் செல்வதுதான் இன்றைய காலத்தின் அவசியமாகும். தன்னலமற்ற, ஆழமான புரிதல் கொண்ட, தமிழ் ஈழ நிலத்தின் ஆன்மாவை நேசிக்கும் இளைஞர்களும் அரசியல் தலைமைகளுமே எமக்கு அவசியமானவை. திலீபன் போன்ற போராளிகளை நினைவுகூரும்போது, நம்மையும் நமது நிலத்தின் இன்றைய சூழலையும் குறித்து ஆழமாக சிந்திப்பது அவருக்குச் செய்யும் அஞ்சலியும் அவரை நினைவுகூர்வதன் அர்த்தமுமாக இருக்கும்.

இன்று ஓர் அரசியல் திருத்தம் கொண்டுவரப்படும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. திலீபனை மாத்திரமின்றி, பல நூற்றுக்கணக்கான போராளிகளையும் பல ஆயிரக்கணக்கான மக்களையும் அழித்ததும் ஒரு அரசியல் திருத்தமே. 13ஆவது அரசியல் திருத்தம், உண்மையில் ஈழ மக்களின் உரிமையை அங்கீகரித்திருந்தால், இனப் பிரச்சினையைத் தீர்த்திருந்தால் ஈழம் அந்த இழப்புக்களையும் அதற்குப் பிந்தைய கால இழப்புக்களையும் சந்திருக்காது. இன்றும் தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு அரசியல் திருத்தம் கொண்டுவரப்படுகின்றது. அதனால் எத்தகைய இழப்புக்கள் ஏற்படப்போகின்றன என்பதே அச்சத்தை தருகிறது.

தமிழ் மக்களின் கோரிக்கையை – அபிலாசையை ஏற்றுக்கொள்ளாத அரசியல் தீர்வு, எமது மக்களை தொடர்ந்தும் அழித் தொழிக்கும் ஆயுதம் அல்லது யுத்தமாகும். எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் உரிமையைப் பறிக்காத, அவர்களை அழித்தொழிக்க முடியாத தீர்வொன்றே எமக்கு வேண்டும். அதற்காகவே திலீபன் போன்றவர்கள் கனவையும் பசியையும் சுமந்தார்கள். எமது மக்கள் எல்லா விடுதலையும், உரிமையும் கொண்ட சமத்துவத் தமிழீழ மண்ணில் வாழ வேண்டும் என்பதுவே திலீபன் அவர்களின் கனவு. அத்தகைய தீர்வொன்றைப் பெறாமல், எமது மக்களை ஏமாற்றும் தீர்வுகளை ஏற்றுக்கொள்வது என்பது, திலீபனை, அவரைப் போன்ற போராளிகளை, தொடர்ந்தும் பசியுடன் தம்மை எரித்துக்கொண்டு அலைய விடுவதற்கு ஒப்பான, அநீதிச் செயலாகும்.

பசி

எரியும் அனலில்
தேகத்தை உருக்கி
உயிரால் பெருங்கனவை எழுதிய
ஒரு பறவை
அலைகிறது தீராத் தாகத்தில்

ஒரு சொட்டு நீரில் உறைந்த
நிராகரிக்கப்பட்ட ஆகுதி
வேள்வித் தீயென மூழ்கிறது

சுருள மறுத்த குரல்
அலைகளின் நடுவில் உருகிய ஒளி
உறங்கமற்ற விழியில் பெருந்தீ
இறுதிப் புன்னகையில்
உடைந்தது அசோகச் சக்கரம்

எந்தப் பெருமழையாலும்
தணிக்க முடியாத அனலை
இன்னமும் சுமந்து திரிபவனுக்காய்
ஒருநாள்
எழுமொரு நினைவுதூபி
வந்தமரும் ஒரு பறவை
நிறைந்திருக்கும் பூக்கள்

தணியும் அவன் பசி.

தீபச்செல்வன்

25.09.2015

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More