குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாணத்தில் சில பிரதேசங்களில் தான் வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதற்காக வடமாகாணம் முழுவதும் வாள் வெட்டு வன்முறைகள் இடம்பெறுவதாக கூற முடியாது என வடக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பி.கணேசநாதன் தெரிவித்தார். குப்பிளான் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் கல்விபயிலும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 30 மாணவர்களுக்கு சீருடை துணி வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட சில பிரதேசத்தில் தான் வாள்வெட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன எனவே வடக்கு மாகாணம் முழுவதும் இவ்வாறு இடம்பெறுவதாக கூறமுடியாது. நாம் வாள்வெட்டு சம்பவங்கள் களவு இவற்றை தடுக்கும் முகமாக கிராமங்கள் தோறும் விழிப்பு குழுக்குகளை அமைத்து செயற்படுத்தி வருகின்றோம்.
அந்த விழிப்பு குழுக்கள் இரவு நேரத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் இதனால் விழிப்புக்குழுக்கள் செயற்பட தொடங்கிய பின்னர் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வன்முறைச்சம்பவங்கள் குறைந்துள்ளன. உங்கள் பிரதேசங்களில் சந்தேகதுக்கிடமான முறையில் நடமாடுபவர்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவியுங்கள் அவ்வாறு அறிவிப்பதன் மூலம் சட்டவிரோத சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.