ஒரே ஒரு நாட்டின் அணுகுமுறையால் சார்க் அமைப்பின் முக்கிய நோக்கம் பாதிக்கப்படுகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி இந்தியாவை மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் எனும் அமைப்பின் கூட்டம் நேற்று அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்றது. சார்க் அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்காளதேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு, பூட்டான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உரையாற்றிய போது, மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பு மேம்பபட வேண்டும் எனில் பிராந்திய ஒத்துழைப்பிற்கு சமூக அமைதியும், பாதுகாப்பும் இன்றியமையாதது. பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். எவ்வித பாகுபாடும் இல்லாமல் பயங்கரவாதிகளுக்கு சமூகத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனக் குறிப்பிட்டார். எனினும், அவரது பேச்சு நிறைவடைந்த பின்னர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் உரையை கேட்காமல் இடையிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறி ப்ரிக்ஸ் அமைப்பு நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சுஷ்மாவின் செயலை மறைமுகமாக கண்டித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, பிராந்திய ஒத்துழைப்பிற்கு எதிராக இந்தியா தடைகளை உருவாக்கி வருகிறது என தெரிவித்தார்.அங்கு கருத்து வெளியிட்ட அவர், கூட்டத்தின் இடையிலேயே சுஷ்மா வெளியேறியதற்கு காரணம் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம். பிராந்திய ஒத்துழைப்பை பற்றி அவர் இந்த கூட்டத்தில் பேசினார். பிராந்திய ஒத்துழைப்பை பற்றி பேசுவதற்காக இங்கு அனைவரும் அமர்ந்திருக்கும் போது பேச்சுவார்த்தைக்கு தடை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பிராந்திய ஒத்துழைப்பு எப்படி சாத்தியமாகும் எனக் கேள்வி எழுப்பினார். குறிப்பாக பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் நாடுகளின் செழிப்புக்கு ஒரே ஒரு தடை உள்ளது. ஒரேஒரு நாட்டின் அணுகுமுறையால் சார்க் அமைப்பின் முக்கிய நோக்கம் பாதிக்கப்படுகிறது. என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.