‘எச்-1’ பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா வழங்கி வேலை பார்க்க அனுமதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்து விடக்கூடாது என இரண்டு பெண் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்த காலத்தில் ‘எச்-1’ பி விசாவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கும் (ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும்), அவர்களின் 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கும் ‘எச்-4’ விசா வழங்கி, வேலை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தால், ‘எச்-1’ பி விசாவில் அமெரிக்காவில் வேலை பெற்றுக் கொள்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது. இது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிற தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வரமாக அமைந்தது.எனினும் இந்த திட்டத்தை ரத்து செய்வதற்கு தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதனைக் கடந்த வாரம் அங்குள்ள நீதிமன்றில் உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்தது. இது தொடர்பாக 3 மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அப்போது கூறப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக அமெரிக்காவில் செல்வாக்குமிக்க ஜனநாயகக்கட்சி பெண் உறுப்பினர்களான கமலா ஹாரிஸ், கிர்ஸ்டன்ஸீ கில்லிபிராண்ட் ஆகியோர் உள்நாட்டு பாதுகாப்புத்துறை இயக்குனர் கிறிஸ்டியன் நீல்சனுக்கும், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்.) பிரான்சிஸ் சிஸ்னாவுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.
அந்தக் கடிதத்தில் அவர்கள் ‘எச்-1’ பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா வழங்கி வேலை பார்க்க அனுமதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்து விடக்கூடாது, அப்படிச்செய்தால் அது பெண்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என வலியுறுத்தி உள்ளனர்.