மியன்மார் நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெறுவதற்கு கனடா நாடாளுமன்றம் ஒருமனதாக தீர்மானித்துள்ளது. மியன்மாரில் ரோஹிஞ்சா சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியதால் அவருக்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது
கடந்த ஓராண்டு காலமாக மியன்மாரில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களால் சுமார் ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மியன்மாரை விட்டே வெளியேறி பங்களாதேசில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் ரோஹிஞ்சா இன மக்களுக்கெதிராக நடந்த இனப்படுகொலைகள் தொடர்பாக மியன்மார் ராணுவ அதிகாரிகளை விசாரணை செய்ய வேண்டும் என கடந்த மாதம் ஐ.நா வெளியிட்டிருந்த வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் அவருக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெறுவதற்கு கனடா நாடாளுமன்றம் ஒருமனதாக தீர்மானித்துள்ளது
சூச்சி இன்னும் கௌரவ குடியுரிமைக்குத் தகுதியானவராக உள்ளாரா என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேள்வி எழுப்பிய மறு நாளே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2007 ஆம் ஆண்டு கனடா கௌரவ குடியுரிமை வழங்கி கௌரவிக்கப்பட்ட ஆறு பேரில் சூச்சியும் ஒருவராக காணப்பட்டுள்ளார்.
மியன்மாரில் மக்களாட்சியை நிறுவ மேற்கொண்ட முயற்சிகளுக்காக ஆங் சான் சூச்சிக்கு 1991இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது