பி.மாணிக்கவாசகம்…
யுத்த மோதல்களில் மனித உரிமைகள் மீறப்படவில்லை. சர்வதேச மனிதாபிமான சட்டங்களும் மீறப்படவில்லை. எனவே, உரிமைகள் மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டிற்கு எந்தவொரு இராணுவத்தினரும் உள்ளாக்கப்படமாட்டார்கள். உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் உள்ளக விசாரணைகளாகவே இருக்கும். வெளித் தலையீடுகளுக்கு இடமில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு உறுதியானது என்பதில் அரசு பிடிவாதமாக உள்ளது. இந்த பிடிவாதத்தை ஐநா வின் 73 ஆவது கூட்டத் தொடரில் முக்கிய உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெட்டத் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்.
எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்வோம். அவற்றில் சர்வதேசம் தலையிடக் கூடாது. உள்நாட்டிலேயே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு வேண்டிய ஒத்துழைப்பை சர்வதேசம் வழங்கி உதவி புரிய வேண்டும் என ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள கோரிக்கையில் பேரினவாதமே தொக்கி நிற்கின்றது.
‘உலகத்தின் மிகவும் பலம்வாய்ந்த ஒரு பயங்கரவாத அமைப்பே, இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் தோற்கடிக்கப்பட்டது. ஆகையால்தான் இலங்கை இன்று பிரிக்கப்படாத, சிதைவடையாத, நிலையான சமாதானத்தைக் கொண்ட ஒரு நாடாக இருந்து வருகின்றது. ஆகையால் இலங்கையின் நிலையான சமாதானத்தையும், ஐக்கியத்தையும் மேலும் உறுதிப்படுத்தவதற்கு, எமது பாதுகாப்புப் படைகள் பலம் மிக்க பயங்கரவாத அமைப்பொன்றை தோல்வியடையச் செய்த வரலாற்றுக் கடமையை மிகுந்த மதிப்புடன் ஞாபகப்படுத்துவதுடன், நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அவர்கள் மேற்கொண்ட அந்த பெரிய அர்ப்பணிப்புக்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிNசுன ஐநா கூட்டத்தொடரில் உரையாற்றுகையில் கூறியுள்ளார்.
உலகின் மிகவும் பலம்வாய்ந்த ஒரு பயங்கரவாத அமைப்பென்று அவர் குறிப்பிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு, ஏன் அத்தகைய பலம் வாய்ந்த ஓர் அமைப்பாக உருவெடுத்தது, அதன் பின்னணி என்ன என்பதை அவர் விளக்கி உரைக்கவில்லை.
விடுதலைப்புலிகள் அமைப்பானது, தமிழ் மக்களின் நிராகரிக்கப்பட்ட அரசியல் உரிமைகளுக்காக ஆயதமேந்தி போராடிய ஓர் அமைப்பு. நாடு அன்னியரிடமிருந்து சுதந்திரம் பெற்றநாள் முதலாக படிப்படியாகத் தொடர்ந்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளும், அடிப்படை அரசியல் உரிமைகளும் பேரினவாத போக்கில் சிக்கித் திளைத்துள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளினாலும், மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளினாலும் மறுக்கப்பட்டு வந்துள்ளன. அத்துடன் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த தமிழ் அரசியல் தலைவர்களும், அந்த மக்களும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
மக்கள் ஆட்சி பரிணமித்துள்ள தற்காலத்தில், மன்னர் காலத்தைப் போன்று மதத் தலைவர்களின் வழிகாட்டலை தேவ வாக்காகக் கொண்டு ஆட்சி புரிகின்ற போக்கையே பேரின அரசியல்வாதிகளும், அராங்க தரப்பினரும் கடைப்பிடித்து வருகின்றார்கள். குறிப்பாக இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்கள் பின்பற்றுகின்ற பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தியே, அந்த அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றார்கள். ஆட்சி புரிகின்றார்கள்.
அரசியலிலும், ஆட்சியிலும் மட்டுமல்லாமல், நாட்டின் அதி உயர்ந்த சட்ட வரைவாகிய அரசியலமைப்புச் சட்டத்திலும், பேரினத்தவராகிய சிங்களவர்களின் மொழியாகிய சிங்களத்திற்கும், அவர்களின் மதமாகிய பௌத்தத்திற்குமே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கின்றது. அதன் அடிப்படையிலேயே இங்கு அரசியல் நடக்கின்றது. ஆட்சியும் புரிகின்றார்கள்.
இந்த நாட்டில் சிங்களவர்களுடன், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் மற்றும் வேறுபல இனங்களையும் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருவதனால், இது ஒரு பல்லின மக்கள் வாழ்கின்ற நாடாகக் கணிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்திலும், அரசியல் போக்கிலும் இந்த பல்லினத்தன்மை புறக்கணிக்கப்பட்டிருப்பதையே காண முடிகின்றது.
பன்மைத்துவ அரசியல் நிலைமையுடைய இந்த நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்ற பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஆனால், பல்லினங்களைக் கொண்ட நாடு என்ற அடிப்படையில் அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதில்லை. அந்த வைகயில் அரசியலும் நடத்தப்படுதில்லை இதனை இலஙகையின் சார்பில் ஐநாவில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன.
இராணுவத்தின் செயற்பாடு
இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்கி இருந்தது. அல்லது பயங்ரகவாதம் அரசோச்சியது என்ற கூற்றும் நிலைப்பாடும் இனவாதம் சார்ந்ததே அல்லாமல் நியாயமான நிலைப்பாடு என்று கூறுவதற்கில்லை. அரசியல் உரிமைக்கான சாத்வீகப் போராட்டங்களும், இரு தரப்பு பேச்சுவார்த்தைகளும் வெற்றி பெறவில்லை. அவைகள் தோல்வியிலேயே முடிவடைந்தன.
பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட உடன்பாடுகள் நிறைவேற்றப்படவில்லை. எற்றுக்கொள்ளப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. கையெழுத்திடப்பட்ட உடன்படிக்ககைகள் கிழித்தெறியப்பட்டன. கிடப்பிலும் போடப்பட்டன. இதனால் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மாறாக பிச்சிகைள் பல்கிப் பெருகின. அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்த அரசியல் உரிமைப் போராட்டங்கள் அதிகாரத்தின் உதவியோடு, அதிக பலப்பிரயோகத்தின் மூலம் அடக்கி ஒடுக்கப்பட்டன. இதனால், போராட்டங்களை முன்னெடுப்பதில் பாதுகாப்புப் பிரச்சினையும் பிரச்சினைக்குத் தீரவு காணப்பட வேண்டும் என்ற வேட்கையும் அதிகரித்தன. இவையே ஆயுதப் போராட்டம் வலவடைவதற்கு வழி வகுத்திருந்தன.
அரசியல் உரிமைக்கான போராட்டம் பயங்கரவாதச் செயல்களாக, பயங்கரவாதமாக அரசாங்கத்தினால் சித்தரிக்கப்பட்டது, உரிமைப் போராட்டமும், பாதுகாப்புக்கான போராட்டமும் ஒன்றிணைந்தபோது ஆயுதமேந்தி அரசுக்கு எதிராகப் போராடியவர்கள் தரப்பில் சில சம்பவங்கள் இடம்பெற்றதை மறுக்க முடியாது. ஆனால் அவைகள் வெறுமனே பயங்கரவாதச் செயற்பாடுகள் என்ற வரையறைக்குள் அடக்கிவிட முடியாது.
அரசுக்கு எதிராக விடுதலைப்புலிகள் எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத சந்தர்ப்பங்களில் நடத்திய தாக்குதல்களின் விளைவாக அரச படைகளும் அத்துமீறி உணர்ச்சி வசப்பட்டும், அரசியல் நோக்கத்தின் பின்புலத்திலும் நடத்திய தாக்குதல்களும் பயங்கரவாதத் தாக்குதல்களாக நோக்கப்படத்தக்கவையே.
பரஸ்பரம் ஆயுத ரீதியாகவும், ஆயுதமேந்திய அணிகளின் நிலைகளையும் கேந்திர முக்கியத்துவம் மிக்க தளங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் அல்லது, எதிராளியின் தாக்குதல் செறிவுத் தன்மையைத் தளரச் செய்வதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாகவே இந்த சம்பவங்கள் பார்க்கப்பட வேண்டும். இருப்பினும் ஆயுத மோதல்களில் நேரடியாக சம்பந்தப்படாத தரப்பினராகிய பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை எந்த காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. அவைகள் மனிதாபிமானத்தை மீறிய செயல்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.
இந்த விடயத்தில் விடுதுலைப்புலிகள் என்ற ஆயுதமேந்திய ஓர் அமைப்பைவிட இறைமையுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்ற வகையில் அரச படைகளின் பொறுப்பும் கடமை உணர்வும், மேலோங்கியவை என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் மிகவும் பொறுப்போடு அசச படைகள் செயற்பட்டிருக்க வேண்டும் என்பதே, யுத்த மோதல்களின்போது இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் என்ற ஐநவினதும், சர்வதேசத்தினதும் வற்புறுத்தலின் உள்ளடக்கமாகும்.
இத்தகைய பின்னணியில், ஐநா மனித உரிமைப் பேரவையின் இரண்டு தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி அவற்றில் கூறப்பட்டவற்றை நிறைவேற்றுவதாக உறதியளித்த அரசாங்கம் 73 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றி, இராணுவத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி, சர்வதேச அரங்கு ஒன்றில் அரச படைகளின் செயற்பாடுகளை அர்ப்பணிப்புமிக்க நடவடிக்கைகளாகச் சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்திருப்பது பொருத்தமானதாத் தெரியவில்லை.
யுத்தம் முடிவடைந்து பத்தாவது ஆண்டை நெருங்குகின்ற ஒரு சந்தர்ப்பத்தில், அதுவும் உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய கடப்பாட்டில் சிக்கியுள்ள ஓர் அரசாங்கம் அந்த பொறுப்புக்களை உதறித்தள்ளிவிடுகின்ற போக்கில் கருத்து வெளியிட்டிருப்பது என்பது பேரினவாத நிலைப்பாட்டின் வெளிப்பாடே ஆகும்.
நம்பிக்கைகளும் நல்லாட்சி அரசு மீதான எதிர்பார்ப்புகளும்
யுத்தம் முடிவடைந்ததும், நாட்டில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய பிரச்சினைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. அவற்றுக்குத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையில் 2015 ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தில் மக்களால் அமர்த்தப்பட்ட அரசாங்கம், அந்த எதிர்பார்ப்புகளைத் தகர்த்தெறிந்துள்ளது.
யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தல்கள் இல்லாத நிலையில், ஒழிக்கப்பட்ட பயங்கரவாதத்தின் நிழல்கூட இல்லாத சூழலில் வடக்கிலும் கிழக்கிலும் 5 பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற விகிதாசாரத்தில் பாதுகாப்புப் படைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன.
அதேபோன்று, யுத்தம் முடிவடைந்ததும், யுத்த மோதல்களினால் அழிக்கப்பட்ட பிரதேசங்கைளக் கட்டியெழுப்புவதிலும், அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை நிலைமையில் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதிலும் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவற்றில் போதிய அளவில் கவனம் செலுத்தப்படவில்லை. அடிப்படையில் சில விடயங்கள் மேம்போக்கான நிலையில் செய்யப்பட்டிருக்கின்றனவே தவிர, நீடித்து நிலைத்து நிற்கத்தக்க புனரமைப்புப் பணிகளும் மறுவாழ்வுப் பணிகளும்ட உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை.
யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து துப்பாக்கி வேட்டுக்களின் சத்தமும், குண்டுவெடியோசைகளும் மறைந்திருக்கின்றனவே தவிர, உண்மையான சமாதானமும், ஐக்கியமும், நல்லிணக்கமும் இன்னும் ஏற்படவில்லை. ஏற்படுத்தப்படவில்லை. இதனால், போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வெறுப்படைந்திருக்கின்றார்கள். தங்களுடைய வாக்குப் பலத்தினால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள அரசாங்கம் இவ்வாறு தமது நம்பிக்கைகளை சிதறடிக்கும் வகையில் நடந்து கொள்வதனால் மனமுடைந்து போயிருக்கின்றார்கள். இதுதான் இன்றைய யதார்த்தம்.
ஏனெனில் யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகப் போகின்ற நிலையிலும், இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை. மீள்குடியேற்றப்படவுள்ள குடும்பங்களின் கிராமங்களும், சட்டரீதியாக அவர்களுக்கு உரித்தாக வழங்கப்பட்ட காணிகளிலும் அரச படைகள் நிலைகொண்டிருக்கின்றன. அந்தக் காணிகளில் இருந்து அவர்கள் வெளியேற மறுக்கின்றார்கள். சில சில இடங்களில் விட்டுக்கொடுக்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் விட்டுக் கொடுக்கப்பட வேண்டிய இடங்கள் சிலவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்து நிதி வழங்கினால் மட்டுமே அந்தக் காணிகளை விட்டுக்கொடுக்க முடியும் என்று பகிரங்கமாக படையதிகாரிகள் கூறி வருகின்றனர்.
படை அதிகாரிகளின் இந்தக் கூற்றை அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், மீள்குடியேற்ற அமைச்குக் பொறுப்பான அமைச்சர் சுவாமிநாதன், இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றிவிட வேண்டும் என்ற உந்துதலில்தானோ என்னவோ இராணுவம் கோருகின்ற நிதியை அரசாங்கத் திறைசேரியில் இருந்து பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றார். சில இடங்களில் அத்தகைய நிதி இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் அச்சாணியாகத் திகழும் அரச படைகள் இவ்வாறு பொதுமக்களின் காணிகளைக் கைப்பற்றி வைத்துக் கொண்டு அவற்றை விட்டுக் கொடுப்பதென்றால் அதற்கு மாற்றீடாக பணம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிப்பது அதிச்சி தரத்தக்கது. அபத்தமானதும்கூட.
இத்தகைய ஒரு நிலைமையில்தான் யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகப் போகின்ற நிலையில் நாட்டில் அமைதியும், சமாதானமும், ஐக்கியமும் நிலவுகின்றது. அதனை மேலும் வலுப்படுத்துவதற்க சர்வதேசம் உதவிபுரிய வேண்டும். ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஐநா கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
புதிய கண்ணோட்டம்
பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு எதிராக உரிய முறையில் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. சிலருக்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. ச்pலருடைய வழக்குகள் ஆளுமாதத்திற்கொரு தடவை அல்லது வருடத்திற்கொரு தடவை என்ற ரீதியில் விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டு இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. இதனால், தண்டனை விதிக்கப்படாமலேயே அந்தக் கைதிகள் நீண்ட சிறைவாசத்தைத் தண்டனையாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்னும் சிலருக்கு ஆரம்ப விசாரணைகளே முடிவடையவில்லை. வெறுமனே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகைத் தயாரிப்பதற்கான ஆதாரங்களின்றி அல்லது அத்தகைய ஆதாரங்களைத் தேடுவதில் காலம் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றது. இதனால் அவர்களும் என்ன காரணத்தி;ற்காகக் கைது செய்யப்பட்டோம், தங்களுக்கு என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாமல் வழக்குமின்றி, விடுதலையுமின்றி இண்டும் கெட்ட நிலையில் சிறைத் தண்டனை அனுபவித்த வண்ணம் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற இடங்களில் மட்டுமல்லாமல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரிலும் போராட்டங்கள் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
வடக்கில் குறிப்பாக வவுனியாவில் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் பொது அமைப்புக்களினால் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இதற்கமைய ஒக்டோபர் முதலாம் திகதி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
மறுபக்கத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் மூன்று வருடங்களாக ஆட்சி நடத்தி வருகின்ற அரசாங்கத்திடம் என வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவ்pனர்கள் ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலமாகப் போராடி வருகினறார்கள்.
முல்லைத்தீவு மாவட்டம் கோப்பாப்பிலவு கிராமத்தில் நிலைகொண்டுள்ள படையினரை வெளியேற்றி தமது காணிகளில் தங்களை மீள்குடியேற்ற வேண்டும் என கோரி நடத்தப்படும் போராட்டமும் ஒரு வருடத்திற்கு மேலான காலத்தைக் கடந்துவிட்டது. ஆனால்
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் பாராமுகமாகவே நடந்து கொண்டிருக்கின்றது.
இதையும்விட புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டு, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமா என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது.
யுத்தத்திற்குப் பின்;னரான காலப்பகுதியில் வடக்கிலும் கிழக்கிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் இவ்வாறு பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்ற அதேவேளை, நாடளாவிய ரீதியில் விலைவாசி ஏற்றம், தொழில்வாய்ப்பின்மை, உரிய சம்பள உயரிவு போன்ற மக்கள சார்ந்த பல பிரச்சினைகள் நாட்டு மக்களை அழுத்திக் கொண்டிருக்கின்றன.
இன்னொரு புறத்தில் சட்டம் ஒழுங்கு சீராக பேணப்படவில்லை என்றும், நிதி மோசடிகளிலும், ஊழல்களிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று மக்கள் குறைபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இத்தகைய ஒரு பின்னணியில்தான் நாட்டில் சுமுகமான நிலைமைகள் நிலவுகின்றன. சமாதானமும், ஐக்கியமும், நல்லிணக்கமும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஐநா அமர்வில் சர்வதேசத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
ஏற்கனவே சர்வதேசத்pற்கும் ஐநாவுக்கும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாமல், அவற்றை நிறைவேற்றுவதில் விருப்;பமற்றிருப்பதில் பிடிவாதப் போக்கையும் அதற்கு மேலாக இனவாதத்தின் அடிப்படையிலான நிலைப்பாட்டையும் அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளமை நாட்டின் சுபிட்சமான எதிர்காலத்திற்கு நன்மை பயக்க வழிவகுக்கும் என்று கூறுவதற்கில்லை.