தங்கள் தளங்கள் வழியாக தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் பரவ அனுமதிக்கப் போவதில்லை என இந்திய தேர்தல் ஆணையகத்திடம் சமூக வலைத்தளங்கள் வாக்குறுதி அளித்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையாளர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் இடம்பெற உள்ளன. இந்த தேர்தல்களில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையாளர் ஓ.பி. ராவத், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், தேர்தல்ஆணையகத்தின் சிரேஸ்ட துணை தேர்தல் ஆணையாளர் உமேஷ் சின்கா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தம் தொடர்பான குழுவினர், கூகுள், பேஸ்புக், ருவிட்டர் ஆகியவற்றின் உள்நாட்டு தலைமை அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
அவர்களிடம், “தூய்மையான தேர்தலை உறுதி செய்வதற்கு ஏற்ற விதத்தில், போலி செய்திகளால் தாக்கம் ஏற்படுவதை தவிர்க்கவும், வாக்காளர்களை குறிவைத்து தகவல்கள் பரப்புவதை தடுக்கவும், அவர்களின் நிறுவனங்கள் மூலம் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?” என கேட்கப்பட்டது. அதன்போது அவர்கள் தேர்தல் தூய்மையாக நடைபெறுவதற்கு, தங்கள் தளங்கள் வழியாக தவறான தகவல்கள் பரவ அனுமதிக்கப் போவதில்லை என வாக்குறுதி அளித்துள்ளனர். தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் தொடர்பான விடயங்களை தங்கள் தளங்களில் அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர்கள் உறுதி வழங்கியதாக, தலைமை தேர்தல் ஆணையாளர் ஓ.பி. ராவத் குறிப்பிட்டுள்ளார்.