ஈழ நிலத்தில் குழந்தைகள் கைது செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் பதாகைகளை ஏந்தியவாறு போராடுகிறார்கள். குழந்தைகள் தங்கள் வாழ் நிலத்திற்காக போராடுகிறார்கள். உரிமை மறுக்கப்பட்ட அடக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட இனத்தின் குழந்தைகள் எதையெல்லாம் சந்திக்கவேண்டுமோ அதை எங்கள் குழந்தைகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால்தான் மாபெரும் இழப்பும் மாபெரும் அபாயங்களும் நின்று மிரட்டுகின்றன. அவர்களைத்தான் சூனியமான எதிர்காலம் அச்சுறுத்துகிறது.
எங்கள் குழந்தைகள் குழந்தைகளாக பார்க்கப்படுவதில்லை. அவர்களுக்கு என்று எந்த உரிமையும் இல்லை. பல்லாயிரம் குழந்தைகளின் சிறுவர்களின் இரத்தத்தால் எங்கள் நிலம் நனைந்தது. எத்தனையோ குழந்தைகள் எங்கள் மண்ணில் சிங்கள அரசு படைகளின் குண்டுகளால், விமானங்களால் பிய்த்தெறியப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் சரணடைந்த அப்பாவிக் குழந்தைகளை சிங்கள இராணுவம் கொலை செய்து அழித்தது. அவர்களின் புகைப்படங்கள் அவர்களின் இரத்தம் அவர்களின் கண்ணீர் இந்த உலகத்தின் மனசாட்சியை உலுக்கவில்லை. ஈழத்தில் இலங்கை அரசு நடத்திய போரால் எங்கள் குழந்தைகள் இடர்மிக்க காலத்தை சந்தித்துள்ளனர்.
இன்றைக்கு எங்கள் குழந்தைகள் தாய் தந்தையரை இழந்து அனாதரவாக்கப்பட்டுள்ளனர். வடக்கில் உள்ள சிறுவர் இல்லங்கள் சிலவற்றுக்குச் செல்கிறபோது எத்தனை தாய் தந்தையரை இழந்த சிறுவர்களை சந்திக்க முடிகிறது. தாய் தந்தையர்களை குழந்தைகள் இழப்போடு அவர்கள் மாபெரும் தனிமைக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் பேரன்பை இழக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் வேறு ஒரு திசையில் செல்கிறது. இட்டு நிரப்ப முடியாத அந்த இடைவெளி அவர்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சிறுவர் இல்லங்கள் அவர்களுக்கு சிறைக்கூடங்களாகின்றன. அம்மா தரும் அன்பை அப்பா தரும் அரவணைப்பை சகோதரர்கள் கூடியிருக்கும் வாழ்வை யாரால் தர இயலும்? அந்த வாழ்வில் இருக்கும் ஆறுதலை இனிமையை எப்படித் தர இயலும். வாடிய முகங்களுடன் ஏக்கங்கள் நிறைந்த மனத்தோடு பிஞ்சு வயதிலேயே மன நெருக்கடிகள் நிறைந்து வாழும் ஒரு வாழ்க்கைக்கு எங்கள் குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான சிறுவர் இல்லங்கள் என்றில்லாமல் சிறுவர் இல்லங்களுக்கான குழந்தைகளாக அவர்களின் சூழல் அமைக்கப்பட்டிருக்கிறது.
தந்தையை இழந்து, தாயை இழந்து அன்பும் ஆதரவுமற்று அனாதரவாக்கப்பட்டுள்ள குழந்தைகள் தொழிலாளிகளாக நடத்தப்படுகிறார்கள். பக்கத்து வீட்டிலிருந்து வணிக நிறுவனங்கள் வரை வடக்கில் தொழிலாளிகளாக குழந்தைகள் நடத்தப்படுவதைக் காணலாம். தாய் இறந்துபோக தந்தையார் செய்து கொண்ட மறுமணத்தின் ஊடாக கிடைத்த மாற்றுத் தாயே பாடசாலையை இடைவிலக்கி குழந்தைகளை தொழிலாளிகள் போல நடத்துவதையும் காணமுடிகிறது. இவ்வாறு குழந்தைகள் குடும்பங்களில், வீடுகளில் முகம்கொடுக்கும் சிக்கல்கள் ஏராளம்.
வடக்கில் பல பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் முழுக்க முழுக்க அபாயம் மிக்க சூழலில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஆறு வருடங்களாக இராணுவத்தாலும் சிவிலியன்களாலும் சிறுமிகளை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவங்கள் பல வடக்கில் பதிவாகியுள்ளன. எவரும் சட்டத்திற்கு முன்னால் தண்டிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக நிலை நிறுத்தப்பட்ட இராணுவத்தினர் தொடர்ந்தும் தமது பாலியல் துஷ்பிரயோகச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இராணுவத்தின் இனவெறிப் பாலியல் துஸ்பிரயோகங்கள் சிவிலியன்களுக்கும் தூண்டுதலாக அமைகிறது.
போதைப்பொருள் பாவனை இன்று ஈழச் சிறுவர்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. பல சிறுவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாக்கப்பட்டு பாடசாலைகளைவிட்டு இடைவிலகி தமது எதிர்காலத்தை சூனியமாக்கியுள்ளனர். காவல் நிலையங்களில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினருக்கு போதைப் பொருள் காவுவதற்கு சிறுவர்கள் உபயோகப்படுத்தும் செயல்கள் ஊடகங்களில் வெளியாக்கப்பட்டிருந்தது. இவைகளுக்கு என்ன காரணம்?
எங்கள் சிறுவர்களின் பெற்றோர்கள் கொல்லப்பட்டு அவர்களின் தாய் தந்தையர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டு அவர்களின் தந்தையர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு அவர்கள் அனாதரவாக்கப்பட்டு அவர்கள் பாடசாலை கல்வியை இழந்து இராணுவ ஆக்கிரமிப்பும் அபாயமும் மிகுந்த சூழலில் வாழத் தள்ளப்பட்டுள்ளமை எதற்காக? இப்படி வாழும் எங்கள் குழந்தைகளுக்கு எங்கள் சிறுவர்களுக்கு இந்த மண்ணில் என்ன உரிமை இருக்கிறது? சிறுவர் கால வாழ்வே சிதைக்கப்படும் எங்கள் சிறுவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
முதலில் எங்கள் சிறுவர்களை உங்கள் திட்டமிட்ட செயற்பாடுகளிலிருந்து விடுதலை செய்யுங்கள். எங்கள் சிறுவர்களை சிறுவர்களாக வாழ விடுவதுதான் அவர்களுக்கு வேண்டிய முதல் உரிமை. அது அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை. எங்கள் சிறுவர்கள் தங்கள் பராயத்தில் தாங்களாக வாழ அனுமதியுங்கள். உரிமை பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு எல்லாமும் பறிக்கப்பட்ட எங்கள் சிறுவர்கள் இலங்கையில் ஈழச் சிறுவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை குறித்து இந்த உலகின் முன் நீதியை கோரி முகத்தில் அறைகின்றனர்.
ஏதுவுமறியாத எங்கள் சிறுவர்களை அழிப்பது ஏன்? அவர்களின் வாழ்வை பறிப்பது ஏன்? அவர்களின் நிலத்தை பறிப்பது ஏன்? அவர்களின் தாய் தந்தையரை கொன்றும் காணாமல் போகச் செய்தும் சிறையில் அடைத்தும் அனாதைகளாக்கியது ஏன்? குழந்தைகளை, சிறுவர்களை பழிவாங்கும் குறி வைக்கும் ஒரு நாட்டில் சிறுவர் உரிமையும் மனித உரிமையும் எந்த விசித்திரத்தில் இருக்கிறது? அந்த நாட்டை அதன் அரசை இந்த உலகம் மயிலிறகால் தடவுவது குழந்தைகளின் சிறுவர்களின் நலன்களுக்கு இந்த உலகம் உன்ன இடத்தை வழங்குகிறது என்பதே இங்கு எழும் பெரும் கேள்வி?
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்