ஈரானில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடித்த 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதனால் 16 பேர் பார்வைத் திறனை இழந்துள்ளதாகவும் 170 பேர் இரத்தமாற்று சிக்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வாரங்களில் ஈரானின் ஐந்து மாகாணங்களில் இவ்வாறு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கிக் குடித்த 19 வயது பெண் ஒருவர் உட்பட 460 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக மதுபானங்களை தயார் செய்து, விற்பனை செய்ததாக கணவன்-மனைவி உள்பட 3 பேரை ஈரான் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரானில் 1979-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு சட்டம் அமுலில் உள்ளது. இதனை மீறி மது குடிப்பவர்களுக்கு கசையடி மற்றும் அபராதம் விதிக்கப்படும். எனினும் அந்நாட்டு மக்கள் சட்டவிரோதமாக வீட்டிலேயே தயாரிக்கும் அல்லது வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபானங்களை வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.