குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குளத்தை பாதுகாப்பதற்கும் அதனை அழகுப்படுத்துவதற்குமான விசேட கூட்டம் ஒன்றை விரைவில் கூட்டவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியான அதன் பின்புறம் வசதி படைத்தவர்களாலும் செல்வாக்கு மிக்கவர்களாலும் அத்துமீறி நாளாந்தம் பிடிக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிராக தங்களால் சட்டரீதியான நடவடிக்கைக்கு செல்லமுடியாமைக்கு குறித்த பகுதி தங்களுடைய சொத்து என்பதற்கு எவ்வித ஆவணங்களும் இல்லை.
அதற்கான ஆவணங்களை கோரி கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு 16-04-2018 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எந்திரி ந.சுதாகரன் தெரிவித்தார். இது தொடர்பில் மாவட்ட அரச அதிபரை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் கிளிநொச்சி குளத்தை பாதுகாக்க வேண்டிய நீர்ப்பாசனத் திணைக்களம் அதில் போதிய அக்கறையின்றி காணப்படுகிறது. தங்களுக்குரிய உடமை ஒன்றை பாதுகாக்கவேண்டிய அதிக அக்கறை உடமையாளருக்கு இருக்க வேண்டும்.எனவும் தெரிவித்தார்.
மேலும் கிளிநொச்சி குளத்தின் எல்லைகள் தொடர்பான நில அளவை வரைபடம் வரையப்பட்டு 2018-08-21 ஆம் மாகாண நீர்ப்பாசனத்திணைக்களத்திற்கு கிளிநொச்சி நில அளவைகள் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிகள் மாவட்ட அரச அதிபருக்கும், கரைச்சி பிரதேச செயலாளருக்கும் பிரதியிடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்
அத்தோடு விரைவில் கிளிநொச்சி குளத்தை பாதுகாப்பது பற்றியும் அதனை அழகுப்படுத்தல் தொடா்பிலும் விசேட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.