புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிசிசிஐ- மதிக்காததால் 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முறைப்பாட்டினை ஐசிசி விசாரிக்க ஆரம்பித்துள்ளது. மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாக போட்டியிடும் கிரிக்கெட் தொடருக்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளிக்காதமையினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்ததனையடுத்து 2014-ம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
அந்த அடிப்படையில் 2015-ம் ஆண்டு முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே 6 தொடர்களை நடத்தவும் அதில் 4 தொடர்களை பாகிஸ்தானில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.இந்த ஒப்பந்ததில் அப்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் சஞ்சய் பட்டேல் கையெழுத்திட்ட போதும் மத்திய அரசு அனுமதி அளிக்காததால் பாகிஸ்தானிலோ, பொதுவான இடத்திலோ விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து இதனால் தங்களுக்கு 500 கோடி ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை ஐசிசி-யிடம் முறைப்பாடு செய்தது. இந்தநிலையில் பாகிஸ்தானின் முறைப்பாட்டு மனு குறித்து ஐசிசி- நேற்று விசாரணையை ஆரம்பித்துள்ள நிலையில் இரு நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினரும் சர்வதேச சட்ட நிபுணர்களை வாதாட நியமித்துள்ள நிலையில் அடுத்த விசாரணை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.