முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிகளை பலவந்தமாக கைப்பற்றி சிங்கள குடும்பங்களை குடியேற்ற போவதில்லை என அரசாங்கம் கூறிய போதிலும் மகாவலி எல் வலயம் ஊடாக தொடர்ந்தும் காணிகள் கைப்பற்றப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்படும் நடவடிக்கைகள் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் சுமந்திரன் இதனை கூறியுள்ளார். அத்துடன் இது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு கடிதத்தை நாளைய தினம் நடைபெறவுள்ள வடக்கு, கிழக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளைய தினம் மாலை வடக்கு,கிழக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் இதன்போது இக் குடியேற்றம் தொடர்பிலான கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்து, அது குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகாவலி எல் வலயத்திற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் 700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன் தெற்கில் இருந்து சிங்களவர்களை அழைத்து வந்து குடியேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முறையிட்ட போது, அப்படி எதுவும் நடக்காது ஜனாதிபதி வாக்குறுதியளித்தாக கூறிய சுமந்திரன் மீண்டும் அந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை அவர்கள் இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுவது மட்டுமல்லாது, முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி தொழிலுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.