170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் அரசியல் கைதிகள் மரண போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் நிலையில் வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் அவர்களுடைய விடுதலைக்கு தேவையான நடவடிக்கைகளை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்மந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுங்கள் அல்லது புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யுங்கள் எனக்கேட்டு கடந்த 19 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
அது வெறுமனே உணவு தவிர்ப்பு போராட்டம் மட்டுமல்ல. அது மரணப்போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கும் என்ற நிலையில் அவர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்படவேண்டியது கட்டாயம்.
நான் அவர்களை சந்திப்பதற்காக நேரில் சென்றிருந்தபோது அவர்கள் மருந்தையும் ஒறுத்து போராட்டம் நடாத்திக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு கூறினேன் உங்களுடைய உயிர்கள் பெறுமதியானை அவை காக்கப்படவேண்டியவை. ஆகவே மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள் என.
அவர்கள் அதற்கு சம்மதித்தார்கள். இவ்வாறு அவர்கள் மரண போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பில்தான் சட்ட வல்லுனர்கள் இருக்கிறார்கள் என கூறிக்கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கவேண்டும்.
மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்திலேயே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின்
விடுதலை தொடர்பாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி ஒரு குழுவை அமைத்து அதன் ஊடாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யலாம். மற்றயது அரசியல் கைதிகள் தமது தண்டணை காலத்தில் நன்னடத்தையை வெளிப்படுத்தினால்
அவர்கள் தமது குடும்பங்களைச் சென்று பார்த்து வருவதற்கு அனுமதியை கொடுக்கலாம். இந்த விடயங்களையாவது சட்டவல்லுனர்கள் என கூறுபவர்கள் அரசுடன் பேசி செய்திருக்கலாம்.
சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைதானவர்கள் தொடர்பாக..
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த வழங்கில் 4 அப்பாவிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் உண்மையில் சுமந்திரனை கொலை செய்வதற்கு முயற்சித்தவர்கள் அல்ல. கைது செய்யப்பட்ட 4 பேரில் இருவர் கையை இழந்தவர்கள். ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் சுய நினைவு இல்லாமல் இருந்தவராவர். 4வது நபரின் பிள்ளைக்கு இதயத்தில் ஓட்டை அதற்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது.
இவ்வாறு 4 அப்பாவிகளை பிடித்து வைத்துக் கொண்டு சுமந்திரன் தமிழ் மக்களின் பிரதிநிதி என கூற கூடாது. சுமந்திரனுக்கு மனச்சாட்சி இருந்தால் அந்த 4 பேரையும் விடுதலை செய்யவேண்டும்.
நான் சத்தியம் பண்ணி சொல்கிறேன்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் அப்பாவிகளாவர் அவர்களுக்கு சுமந்திரனை கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில்லை. ஜனாதிபதியே தன்னை கொலை செய்ய முயற்சித்தவருக்கு பொது மன்னிப்பை வழங்கியுள்ளார். ஆனால் சுமந்திரன் 4 அப்பாவிகளை வதைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்காக சமாதானம் பேசுவதற்கு செல்கிறார் என தெரிவித்தார்.
Spread the love