குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழில்.அடாத்தாக சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்களால் நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் மாத்திரமின்றி யாழ் குடா நாடே வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் உண்டு என சிரேஸ்ட பொறியியலாளர் ம. இராமதாசன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அதன் போது மேலும் தெரிவிக்கையில் ,
குளங்களை காணவில்லை.
யாழ்.குடாநாடு பெரிதும் நிலத்தடி நீரினையே நம்பி உள்ளன. அதனை நாம் தொடர்ந்து பாதுக்காக்க வேண்டுமாயின் நிலத்தின் மேலுள்ள நன்னீர் நிலைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அதனை நாம் செய்ய தவறுகின்றோம். நிலத்தின் மேலுள்ள குளங்கள் நன்னீர் தேக்கங்கள என்பவற்றை உரிய முறையில் பராமரிப்பதன் ஊடகாவே நிலத்தடி நீரினை பாதுகாக்க முடியும்.
யாழில்.40 குளங்கள் காணப்பட்ட நிலையில் பல குளங்கள் அழிவடைந்து வருகின்றன. 4 குளங்கள் முற்றாக அழிவடைந்து குளங்கள் இருந்த இடமே தெரியாத நிலையில் காணப்படுகின்றன.
அடாத்தான கட்டடங்கள்.
யாழில்.யுத்த கால பகுதியில் நிலவிய நெருக்கடி சூழ்நிலைகளை பயன்படுத்தி பல கட்டடங்கள் சட்டவிரோதமாகவும் , அடாத்தாகவும் கட்டப்பட்டு உள்ளன. அவற்றினால் வெள்ளம் வடிந்தோடும் வாய்கால்கள் மூடப்பட்டு வெள்ளம் வடிந்தோட முடியாத நிலைகள் காணப்படுகின்றன.
யுத்த காலத்தில் கட்டப்பட்ட கட்டங்கள் மாத்திரமின்றி தற்போது கூட உரிய நியமங்கள் இல்லாமல் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அதிகாரிகள் அவை தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
வெள்ள வாய்க்காலினுள் கழிவு நீர்.
வெள்ளம் வடிந்தோட கட்டப்பட்ட வாய்காலுக்குள் வீட்டு உரிமையாளர்கள் , கடை உரிமையாளர்கள் என பலரும் அவற்றுக்குள் கழிவு நீரினை விடுகின்றார்கள். அதனால் வெள்ளம் வடிந்தோடும் நோக்கோடு கட்டப்பட்ட கால்வாய்க்கால்கள் கழிவு நீர் வாய்கால்களாக காணப்படுகின்றன.
யாழ்.போதனா வைத்திய சாலையை சூழவுள்ள வாய்க்கால் வெள்ளம் வடிந்தோட கட்டப்பட்ட வாய்க்கால் அதனுள் கழிவு நீரினை விடுவதனால் தான் அவை தேங்கி அசுத்தமாக காணப்படுகின்றன.
பொம்மைவெளி.
மழை காலத்தில் வழிந்தோடும் வெள்ளம் சில வேளைகளில் கடல் நீரின் மட்டம் அதிகரித்தால் அவை கடலினுள் செல்ல முடியாத நிலைமை காணப்படும். அதன் போது பொம்மை வெளி பகுதிகளை சூழவுள்ள காணிகளில் வெள்ளம் தேங்கி நிற்கும்.
அதனால் யாழில் பெரு மழை பெய்ததால் கூட வெள்ள அபாயம் காணப்படாது. ஆனால் தற்போது வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளில் அரசியல் வாதிகள் தமது அரசியல் நோக்கத்திற்காக குடியேற்றங்களை மேற்கொண்டு வெள்ளம் நிற்கும் காணிகளை மண் போட்டு உயர்த்தி உள்ளமையால் வெள்ளம் வடிந்தோட முடியாத நிலைமை கானப்பட்டுகின்றது.
நிஷாவை விட பாதிப்பு அதிகமாகும்.
யாழ்ப்பாணத்தை நிஷா புயல் புயல் தாக்கிய வேளை வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. அதே போல் ஒரு நிலைமை மீண்டும் ஏற்படுமாயின் முன்னரை விட மிக பெரிய அனர்த்தத்தை யாழ்ப்பாணம் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டு உள்ளது என மேலும் தெரிவித்தார்.