குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையை அதிகரிக்கும் அதேவேளையில் கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் நட்சத்திர ஹோட்டல்கள் உருவாவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். இவ்வாறான ஹோட்டல்கள் மிகுந்த கவனத்துடன் கட்டப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரசபை மற்றும் மன்னார் பிரதேசசபை ஆகியவற்றின் நிதிப்பங்களிப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு அழகு படுத்தப்பட்ட தலைமன்னார் கடற்கரைப்பூங்கா சுற்றுலா மையத்தை நேற்று புதன் கிழமை (3) மாலை வைபவ ரீதியாக திறந்து வைத்த பின் உரையாற்றுகையிலேயே வடக்கு முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,
வட பகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபையின் நிதிப் பங்களிப்பாக சுமார் 10 மில்லியன் ரூபாவும் மன்னார் பிரதேச சபையின் நிதிப்பங்களிப்பு 01 மில்லியன் ரூபாயுமாக இணைந்து கிட்டத்தட்ட 11 மில்லியன் ரூபா செலவில் இந்த கடற்கரைப்பூங்கா அழகு படுத்தப்பட்டது.
இப் பகுதியை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு ஏற்ற வகையில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்கக்கூடிய சிறு குடில்கள், உடை மாற்றும் அறை, குளியல் அறை, மலசலகூட வசதி என்பவற்றுடன் சேர்த்து நிரந்தர வியாபார நிலையக் கட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தலைமன்னார் கடற்கரை கிட்டத்தட்ட பாசிக்குடா கடற்பரப்பை ஒத்த தன்மைகளைக் கொண்டது. இக் கடல் அலைகளற்ற அமைதியான நீர்ப்பரப்பாக காணப்படுவதனால் இதனைப் பெண் கடல் என பொதுமக்கள் அழைப்பர்.
அத்துடன் இந்த கடற்கரை மிகவும் ஆழம் குறைந்ததாக அலை அலையாக வந்து சேரும் மணல் திட்டுக்களைக் கொண்ட ஒரு கடலாகவும் விளங்குவதால் இந்தக் கடலில் நீராட வரும் சுற்றுலாப் பயணிகள் எதுவித பயமும் இன்றி ஒரு குறிப்பிட்ட நீண்ட தூரம் வரை நீருக்குள் நடந்து சென்று நீராட முடியும்.
இக் கடற்கரைகள் நீண்டகாலம் பராமரிப்புக்கள் இன்றியும் கவனிப்பாரற்றும் கைவிடப்பட்ட நிலையிலும் இருந்து வந்துள்ளன. மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் நிறைந்த தூய்மையற்ற பிரதேசங்களாக இவை காணப்பட்ட போதும் இந்த கடற்கரை சுத்திகரிப்பில் தேவையற்ற இவைகள் நீக்கப்பட்டு ஒரு சுற்றுலாப்பூங்காவாக மாற்றப்பட்டிருப்பது மகிழ்விற்குரியது. இலங்கையின் வடபகுதியைப் பொறுத்த வரையில் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரக்கூடிய அழகிய கடற்கரைகள் இங்கு காணப்படுகின்றன.
இப் பகுதிகளின் சீதோஷ்ண நிலை, கடல்நீரின் தன்மை, வெள்ளை மணல் திட்டுக்கள் போன்றவை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்வன. மன்னார் மாவட்டத்தைப் பொறுத்த வரை சுற்றுலாத் தலங்கள் கொட்டிக் கிடக்கின்றன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இருந்து இன்று வரை நிறுவப்பட்ட புராதன சின்னங்கள், கோட்டை கொத்தளங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணங்கள், இந்து கிறிஸ்தவ முஸ்லீம் பௌத்த வழிபாட்டுத் தலங்கள், அல்லிராணிக் கோட்டை, முத்தரிப்புத் துறைப் பகுதியில் எமது முன்னோர்களின் முத்துக்குளிப்பு, சங்குக் குளிப்பு தொழில்களில் ஈடுபட்டமைக்கான சான்றுகள் என பல்வேறு சான்றுகள் இங்கு காணப்படுகின்றன.
அதே போன்று இராமபிரான் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு வானரப்படைகளால் பாலம் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. இவ்வாறான பாலம் இருந்தமைக்கான புவியியல் சான்றுகள் காணப்படுவதுடன் இப் பாலத்தின் எச்சங்கள் மணல் திட்டுக்களாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே இப்போதும் காணப்படுகின்றன.
இத் திட்டுக்கள் முதலாம் தீவு, இரண்டாம் தீவு, மூன்றாம் தீவு என சிறு சிறு தீவுகளாக அடையாளப்படுத்தப்பட்டு அங்கு சுற்றுலாப் பயணிகள் சென்று அத் திட்டுக்களில் இறங்கி இந்த கடற்பரப்பின் அழகினையும் சூரிய வெளிச்சம், பறவைகள் என பல்வேறு அழகான காட்சிகளையும் கண்டுகளிக்கக்கூடியதாக இருக்கின்றது.
இத் திட்டுக்களுக்குச் செல்வதற்கு கடற்படையினரின் கட்டுப்பாடுகளை நீக்கி உதவினால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். போர் முடிந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் படையினருக்கு இனி இங்கு வேலையில்லை என்பதே எனது கருத்து.
வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையை அதிகரிக்கும் அதேவேளையில் கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் நட்சத்திர ஹோட்டல்கள் உருவாவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். இவ்வாறான ஹோட்டல்கள் மிகுந்த கவனத்துடன் கட்டப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பை அவதானிக்க வேண்டும்.
அவற்றின் சாத்தியப்பாடுகள், தொழிலாளர்கள் தேர்வு போன்ற பலவற்றையும் ஆராய வேண்டும். மேலும் காலாதிகாலமாய் அவ்விடங்களில் வாழ்ந்து வந்தோரின் வாழ்வாதாரப் பாதிப்புக்களும் கவனத்திற்கெடுக்க வேண்டும். அவற்றில் கடமைபுரியக்கூடிய வகையில் எமது இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
எனவே வடபகுதியில் ஒரு ஹோட்டல் முகாமைத்துவ பாடசாலையை நிறுவுவதன் மூலம் இப் பகுதியில் உள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு ஹோட்டல் முகாமைத்துவ துறையில் சிறந்த பயிற்சிகளை வழங்கி இனிவரும் காலங்களில் அமைக்கப்படும் புதிய ஹோட்டல்களில் இப் பகுதிகளைச் சார்ந்த இளைஞர் யுவதிகள் பணிக்கு அமர்த்தப்படலாம்.
இவ்வாறான ஒரு முகாமைத்துவ பாடசாலையை அமைப்பதற்கான நிதி உதவியை வழங்குவதற்கு கௌரவ அமைச்சர் அவர்கள் முன்வரும் பட்சத்தில் அதற்குரிய அமைவிடம் மற்றும் நிலம் ஆகியவற்றை வழங்குவதற்கு எமது அமைச்சு தயார் நிலையில் உள்ளது.
எனவே இவ்வாறான ஒரு ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி நிலையத்தை உருவாக்குவதற்குரிய நிதிகளைப் பெற்றுத் தருமாறு கௌரவ அமைச்சர் அவர்களை இத் தருணத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்பது தொடர்ச்சியான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். வெறுமனே சம்பிரதாயபூர்வமாக திறப்பு விழாக்கள் இடம்பெற்ற பின்னர் அதுபற்றி கவனம் எடுக்காது இருத்தல் பயனற்றது.
எனவே மன்னார் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இதில் கூடிய கவனம் எடுத்து இவ்வாறு புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற சுற்றுலா மையங்கள் மென்மேலும் வளர்ச்சி அடையக் கூடிய வகையில் நீங்கள் நவீன யுக்திகளையும் திட்டங்களையும் வகுத்து இவற்றை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
சுற்றுலாத்துறை வளர்கின்ற போது அதன் உப பயனாளிகளாக அந்த இடத்தைச் சுற்றிவரவுள்ள அனைத்துக் குடும்பங்களும் வருவாய்களை பெற்றுக் கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே ஒரு சுற்றுலாத்துறை மையம் வளர்கின்றது என்றால் அந்தக் கிராமமே வளர்வதாகப் பொருள் படும்.
உண்மையில் ஆராய்ந்து பார்ப்போமேயானால் இலங்;கையின் வளர்ச்சி குறைவடைந்த நிலையில் இருப்பதற்கு சுற்றுலாத்துறையில் இந்த அரசு முழுமையான அக்கறையை செலுத்தாமையே காரணமாகும். சுற்றுலாத்துறை பற்றிய முழுமையான அறிவும் புரிந்துணர்வும் எம்மிடையே இன்னும் உருவாகவில்லை என்பதே உண்மை.
பிறநாடுகளை பார்ப்போமேயானால் டுபாய் நாடு எந்தவித வளங்களும் அற்ற ஒரு நாடு. ஆனால் டுபாய் தேசம் ஒரு நிதி சார்பான சுற்றுலாவை மையமாக வைத்து வளர்ச்சியடைந்த நாடாக தன்னை வளர்த்துக் கொண்டதால் இன்று டுபாய் நாட்டின் ஆகாயப் போக்குவரத்து சேவை ஓகோ என கொடி கட்டிப் பறக்கின்றது.
வரிச்சலுகை நீக்கப்பட்ட முதலீடுகள் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதால் தமது சொந்த நாடுகளில் பெரிய வீடுகளையோ கட்டடங்களையோ அமைக்க முடியாதவர்கள் டுபாய் தேசத்தில் பெரிய வீடுகளையும் கட்டடங்களையும் அமைத்து தமது முதலீடுகளை அத் தேசத்தில் இட்டு வளமாக வாழ்கின்றார்கள்.
அதேபோன்று டுபாய் நாட்டின் தங்கத்திற்கு உலகளாவிய ரீதியில் நிறைந்த கிராக்கி. ஏனெனில் அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக வாழ்கின்றார்கள். அவர்களின் தங்கம் 22 கரட் எனக் குறிப்பிடப்பட்டிருப்பின் உண்மையாகவே 22 கரட்டாக இருக்கும். இதனால் தங்க விற்பனை கூட செவ்வனே அங்கு நடைபெறுகின்றது.
அதேபோன்று வங்கிச் செயற்பாடுகளில் சுவிற்சலாந்து நாட்டின் வங்கி அமைப்பு முறைகளுக்கு ஒப்பாக டுபாய் நாட்டிலும் வங்கிச் செயற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிதிகளை அந்த நாட்டு வங்கியில் வைப்பிலிடுவதற்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.
சைப்பிரஸ் நாடு ஒரு மிகச் சிறிய தீவாக இருக்கின்ற போதும் அது சுற்றுலாத்துறையின் முழுமையான வளர்ச்சியிலேயே வளம் பெற்று விளங்குகின்றது. எகிப்து நாட்டில் காணப்படுகின்ற பிரமிட் மற்றும் நைல்ஸ் நதி எகிப்து நாட்டிற்கு சுற்றுலாத்துறையை வளம்பெறச் செய்கின்றது.
ருனிசியா நாடு ஒரு முஸ்லீம் நாடாக இருக்கின்ற போதும் அவர்கள் தமது வருவாயை அதிகரிப்பதற்காக வெளிநாட்டவர்களுக்கு குடிவகைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்திருக்கிறார்கள். இதனால் ஏனைய நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மது அருந்திக் களிப்பதற்காக இந்த நாட்டிற்கு பயணத்தை மேற்கொள்கின்றார்கள்.
மாலைதீவு கூட சுற்றுலாத்துறையில் வளம்பெற்ற நாடு. தமது சிறிய தீவுகளை வருமானம் தரும் இடங்களாக மாற்றியுள்ளார்கள். எமது அண்டை நாடான இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெளிநாட்டு பக்தர்களை வரவழைக்கச் செய்கின்றது.
கேரளாவில் உள்ள சபரி மலை, தமிழ் நாட்டில் உள்ள வேளாங்கன்னி என சிறந்த வழிபாட்டுத் தலங்கள் கூட சுற்றுலாத்துறையை வளர்க்க உதவும். அதாவது மத ரீதியான சுற்றுலாத்துறை அங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
எனவே எமது நாட்டில் உள்ள அழகுறு கடற்கரைகள், மலை வளங்கள், கடல் உணவு வகைகள், பனம் பொருள் உற்பத்திகள், மத வழிபாட்டுத் தலங்கள், புராதனச் சின்னங்கள் எனப் பலவும் சுற்றுலாத்துறையை வளம்படுத்த உதவுவன. ஆனால் இவைகள் அரசாங்கத்தின் கைகளில் முடக்கப்படுவதால் சுற்றுலாத்துறை வளரமுடியாமல் முட்டுக்கட்டைகளுடன் திண்டாடுகின்றது.
தனியார் துறையின் அவசியம் பற்றி தற்போது அரசாங்கம் உணர்ந்து அதற்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வருவது மகிழ்ச்சிக்குரியது.
இவற்றை எல்லாம் மனதில் இருத்தி நாம் சுற்றுலாத்துறை பற்றிய திட்டங்களை வகுத்து முன்நோக்கி நகர்வோமாயின் இலங்கையும் சுற்றுலாத்துறையில் மேம்பட்ட ஒரு வளர்ச்சி பெற்ற நாடாக அமையும் எனத் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் இமானுவேல் அமரதுங்க , மன்னார் பிரதேசசபையின் தவிசாளர் எம்.முஜாகீர் உற்பட பிரமுகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.