பெங்களூரு நகரில் ஒரே நாளில் 33 தொன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து சாதனை செய்யப்பட்டு உள்ள நிலையில் அது இது விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்தியா முழுவதிலும் கடந்த திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டதையொட்டி, பல்வேறு இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பெங்களூரு மாநகராட்சி சார்பில் ‘பிளாக் ரன்’ என்ற பெயரில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நிகழ்ச்சி பெங்களூரு மாநகராட்சியுடன் அதிகமான தொண்டு நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்டன. சுமார் 7 ஆயிரம் பேர் குழு குழுவாக பிரிந்து நகரின் 50 இடங்களில் வீதியோரம், பூங்காக்களில் வீசப்பட்டு கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை காலை 9 மணியில் இருந்து இரவு 8.15 மணி வரை சேகரித்தனர்.
தண்ணீர் போத்தல்கள் உள்பட 33 தொன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்களை அவர்கள் சேகரித்து அப்புறப்படுத்தி உள்ளனர். இதன் மூலம், பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பில் முந்தைய கின்னஸ் சாதனையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு மாநகராட்சியும், தனியார் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை, விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது