ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் உள்ள 68 தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற அதேவேளை ஐ.எஸ் உட்பட பல்வேறு தீவிரவாத இயக்கங்களும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஆப்கான் தேசிய ராணுவப்படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் நாடு முழுவதும் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிகளை சுற்றிவளைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதுடன் 120 போர் விமானங்களும் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்தாக்குதல்களை நடத்தின.
இந்தத் தாக்குதல்களினால் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் உள்ள 68 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் இவர்களில் 42 பேர் தரைவழி தாக்குதலிலும், 26 பேர் வான்தாக்குதலிலும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.