இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய நிலையில் தண்டனை பெற்றுள்ள ரோஹிங்கியா அகதிகள் 7 பேரை மியன்மாருக்கு நாடு கடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளமைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் மத்திய அரசின் முடிவை எதிர்த்து இரண்டு ரோஹிங்கியா அகதிகள் சார்பில் பொநல வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உரிய விளக்கமும் அளிக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 7 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் நாடு கடத்தப்பட உள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு சட்டவிரோதமாக வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள குறித்த 7 ரோஹிங்கியா அகதிகளும் மணிப்பூரில் மியான்மர் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு, அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இதனையடுத்து நேற்றையதினம் 7 அகதிகளும் நாடு கடத்தப்படுவதை தடுப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ரோஹிங்கியா அகதிகளை தங்கள் நாட்டு குடிமக்கள் என மியன்மார் அரசு கூறியிருப்பதாகவும், தங்கள் நாட்டிற்கு திரும்ப அழைத்துக் கொள்ள ஒப்புதல் அளித்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்ததனையடுத்து மத்திய அரசின் முடிவில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்த நீதிபதிகள் அவர்களை நாடு கடத்த அனுமதியளித்துள்ளது.
இந்தியாவில் இருந்து மியன்மாருக்கு அதிகாரப்பூர்வமாக அகதிகளை நாடு கடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.