வடக்கு மாகாண சபையின் கடந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் விவாதித்து, வாதாடி, முரண்பட்டு, உடன்பட்டு இருந்தாலும் சபையின் இறுதி அமர்வாக எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வில் வாழ்த்தி சந்தோசமாக விடைபெற்றுச் செல்ல வேண்டுமென அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் போது சபை அமர்வு முடிவுறும் தறுவாயில் அடுத்த அமர்வு தொடர்பில் அறிவிக்கும் போதே சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், முதலாவது வடக்கு மாகாண சபையின் ஐந்தாண்டு காலம் முடிவடைய உள்ளது. இதன் இறுதி அமர்வு எதிர்வரும் 23 ஆம் திகதி நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த அமர்வில் எந்தவித பிரேரணைகளும் எடுத்தக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் எந்தவித வாதங்களுக்கும் இடமிருக்காது. கடந்த ஐந்து வருட காலத்தில் வாதங்கள், முரண்பாடுகள், உடன்பாடுகள் எல்லாவற்றையும் ஏற்படுத்தியிருக்கின்றோம். ஆகவே அந்த ஐந்து வருட நிறைவாக நடைபெறுகின்ற அமர்வில் அனைவரும் சந்தோசமாகக் கூடிக் கலைந்து செல்வோம்.
அந்த அமர்வில் சகலரும் உரையாற்றுவதற்கு மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வழங்கப்பட இருக்கின்றது. ஆகவே அதற்குள் தங்களது கருத்தக்களை கூறி முடிக்க வேண்டுமென்றார்.
இதன் போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித்தலைவர் இந்த நேரம் போதாது என்றும் அன்றையதினம் கதைப்பதற்கு பல விடயங்கள் இருப்பதால் அதிக நேரங்களை வழங்க வேண்டுமென்றும் நிண்ட அமர்வை நடாத்த வேண்டுமென்றும் கோரினார்.
இதற்கமைய தற்போது மதிய உணவு இடைவேளையுடன் நிறைவடையும் அமர்வை மாலை தேனிர் விருந்துபசாரத்துடன் நிறுத்துவாம் என்று அவைத்தலைவர் பதிலளித்தார். மேலும் அன்றையதினம் மாகாண முதலமைச்சரின் பிறந்ததினம் என்பதும் குறிப்பிடத்தக்கது
1 comment
வடக்கு மாகாண சபையின் கடந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் நடந்த முன்னேற்றங்கள், எதிர்கொண்ட சவால்கள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கங்கள் மற்றும் எதிர் காலத்தில் செய்யக்கூடியவை பற்றி எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி அமர்வில் முதல் அமைச்சர் தனது உரையில் கூறினால் நன்றாக இருக்கும்.