யாழ்ப்பாணத்தில் செயற்படும் தற்போது ஆவா குழு பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. ஆவா குழுவை விட்டு சென்றவர்களால் அந்த குழு உடைந்துவிடும் என்பதை மையப்படுத்தி, அதிலிருந்து விலகியவர்கள் தற்போது இலக்கு வைக்கப்படுகின்றார்கள் என சிரேஷ்ட பிரதிக் காவற்துறை மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அரச நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஆவா குழு தொடர்பில் காவற்துறையினராகிய தாம் சட்ட ரீதியாக செயற்பட்டுள்ளதாகவும், செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், தமக்கு உள்ள சட்ட ரீதியிலான எல்லைகளுக்கு அப்பால் சென்று ஆவா குழு விடயத்தில் செயற்பட தயாரில்லை எனவும், சிலர் தாம் அந்த எல்லையை மீறி செயற்படும் வரை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.
உண்மையில் ஏனைய மாகாணங்களை விட வடக்கே மிக அமைதியாக உள்ளது. இவ்வருடத்தில் வடக்கில் இரு கொலை சம்பவங்களே பதிவாகியுள்ளன. அதுவும் தனிப்பட்ட விவகாரங்களை மையபப்டுத்தியவையாகும். அவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆவா குழு இன்று ஒரு மிகப் பெரிய பயங்கரமான குழு என்ற மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் அங்கத்துவம் வகிப்போரைப் பாருங்கள்..( ஆவா குழு உறுப்பினர்களின் புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றினை சிரேஷ்ட பிரதிக் காவற்துறை மா அதிபர் ஊடகவியலாளர்களுக்கு காண்பித்தார்) இவர்கள் இளைஞர்கள். இவர்கள் எண்ணுமளவுக்கு பெரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் இல்லை. சிறிய சிறிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் ஆவ அகுழு தொடர்புபட்ட 21 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. யாழ். காவற்துறைப் பிரிவில் 10 சம்பவங்களும் கோப்பாய் காவற்துறைப் பிரிவில் 2 சம்பவங்களும், சுன்னாகம் காவற்துறைப் பிரிவில் 3 சம்பவங்களும் மானிப்பாய் காவற்துறைப் பிரிவில் 6 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் யாழ். சம்பவங்கள் குறித்து 19 பேரும் கோப்பாய் சம்பவங்கள் தொடர்பில் 6 பேரும் சுன்னாகம் சம்பவங்கள் குறித்து 8 பேரும் மானிப்பாய் சம்பவங்கள் தொடர்பில் 24 பேருமாக மொத்தமாக 57 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலை செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் மானிப்பாய் சம்பவங்கள் தொடர்பில் கைதானோரில் 8 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் உள்ள நிலையில் ஏனைய சந்தேக நபர்கள் அனைவரும் பிணையில் உள்ளனர்.
ஆவா குழுவை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத புலனயவுப் பிரிவு, உளவுத் துறை, விஷேட நடவடிக்கைப் பிரிவுகளின் உதவி ஒத்தாசைகளும் காவற்துறை விஷேட அதிரடிப் படையின் உதவியும் இந்த விவகாரத்தில் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.