வடக்கில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் இன்மை, யுத்த காலத்தில் வெளிநாடு சென்றோர் அனுப்பும் பணத்தில் இளைஞர்கள் வாழ்வது, தென் இந்திய சினிமா படங்களின் தாக்கம் போன்றவையே ஆவா போன்ற குழுக்களின் தோற்றத்துக்கு காரணம் என சிரேஷ்ட பிரதிக் காவற்துறை மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அரச நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வடக்கு இளைஞர்கள் இவ்வாறான குழுக்களில் செயற்பட காரணம் என்ன எனவும், இராணுவத்துக்கு அதிகாரம் அளித்தால் இரு நாட்களில் ஆவா குழுவை அடக்குவதாக யாழ். இராணுவ கட்டளைத் தளபதி கூரறுவதன் ஊடாக காவற்துறையினர் அறிந்திராத ஏதேனும் ஒன்றினை இராணுவம் அறிந்துள்ளதா எனவும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இக்கேள்விகளுக்கு பதிலளித்த சிரேஷ்ட பிரதிக் காவற்துறை மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, “வடக்கில் மட்டும் தனக்கு கீழ் 6000 காவற்துறையினர் எனக்கு கீள் பணிபுரிகின்றனர். ஆவா பிரச்சினை 4 காவற்துறைப் பிரிவுகளில் உள்ளன. 6000 காவற்துறையினரையும் வைத்து நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் ஆவா குழுவை கட்டுப்படுத்துவது என்பது எம்மால் மிக இலகுவாக முன்னெடுக்கப்படும் ஒரு நடவடிக்கை. ஆவா குழு குறித்த பிரச்சினை தீர்க்க முடியுமான மிகச் சிறிய பிரச்சினை. ஆவா குழுவால் எந்த சிக்கலும் தேசிய பாதுகப்புக்கோ, வடக்கின் பாதுகாப்புக்கோ இல்லை” எனத் தெரிவித்தார்.
இதன்போது 4 காவற்துறைப் நிலைய பிரிவுகளிலேயே ஆவா குழுவின் கைவரிசை உள்ளதாக கூறப்பட்ட போதும் வவுனியாவிலும் நேற்று முன்தினம் துண்டுப்பிரசுங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளனவே என சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவிடம் கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, ஆம், வவுனியாவின் சில பகுதிகளில் ஆவா குழு எனக் குறிப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் சில விநியோகிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு வினியோகிக்கப்பட்ட கையேடுகளில் 11 கையேடுகள் தம்மால் பல பகுதிகளில் இருந்தும் கைப்பற்றப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன.
அந்த விசாரணைகளில் ஆவா குழு எனும் பெயரில் விநியோகிக்கப்பட்ட அந்த கையேடுகளுக்கும் ஆவா குழுவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. இந் நிலையில் யாரின் தேவைக்காக இந்த கையேடுகள் விநியோகிக்கப்பட்டன. அமைதியாக இருக்கும் வடக்கை யார் குழப்ப நினைக்கின்றார். அதன் பின்னனியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய நாம் உளவுத் துறை ஊடாக விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். அவ்விசாரணைகளில் இதன் பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இதன்போது ஆவா குழுவை கட்டுப்படுத்த இராணுவத்தை களமிறக்குவதைவிட காவற்துறை விஷேட அதிரடிப் படையால் அவற்றை செய்ய முடியாதா என காவற்துறை விஷேட அதிரடிப் படை கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிக் காவற்துறை மா அதிபர் எம்.ஆர். லதீபிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், வடக்கில் 8 அதிரடிப் படை முகாம்கள் உள்ளன. அதில் யாழ். மாவட்டத்தில் இரண்டு முகாம்கள் உள்ளன. இவை இரண்டு ஊடாகவும் யாழ்., சாவகச்சேரி ஆகிய காவற்துறை பிராந்தியங்களில் காவற்துறையினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கப்படுகின்றன.
உண்மையில் வடக்கில் இளைஞர்கள் இவ்வாறான குழுக்களில் செயற்பட காரணம் என்ன என தாம் ஆராயும் போது, அதிக மது அருந்தும் பழக்கமும் முக்கிய காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. ஆவா குழுவால் பாதுகபபுக்கு எந்த சிக்கலும் இல்லை. எனினும் நாம் தொடர்ந்து விழிப்புடனேயே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.