குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீலப் பசுமை யுகத்தை நோக்கி அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கேற்ப வருடாந்தம் மாவட்ட மட்டத்தில் இடம் பெறும் ‘வனரோபா’ தேசிய நிகழ்ச்சித் திட்டமும் சுற்றாடல் மாநாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (5) காலை மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றது.
மன்னார் -மதவாச்சி பிரதான வீதியில் உள்ள தம்பனைக்குளம் பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் ‘வனரோபா’ தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி தலைமையில் நடை முறைப்படுத்தப்பட்டது.
இதன் போது பாடசாலை மாணவர்கள்,திணைக்கள பணியாளர்களை இணைத்து மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றாடல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் மன்னார் நகர சபை விளையாட்டரங்கில் இடம் பெற்றது.
இலங்கையின் வன அடர்த்தியை 32 வீதமாக அதிகரிக்கும் இலக்கை அடைந்து கொள்ளும் நோக்குடன் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி எண்ணக்கருவின் அடிப்படையில் ‘வனரோபா’ தேசிய மர நடுகை நிகழ்ச்சித்திட்டம் நடை முறைப்படுத்தப்படுவதுடன், ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் தேசிய மர நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் கீழ் அரச, அரசசார்பற்ற மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இவ்வருடமும் ஒக்டோபர் 01 முதல் 31 ஆம் திகதி வரை இந்த நிகழ்ச்சித்திட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது.
குறித்த நிகழ்வுகளில் அமைச்சர்களான றிஸாட் பதியுதீன், வீர குமார, பிரதி அமைச்சர்களாக காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,மாகாண சபை உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேசச் செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதி நிதிகள் , உற்பட அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது வருகை தந்தவர்களுக்கு மரக்கண்றுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது